என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!
அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி நோட்டிஸ் அனுப்பிவிடுவார். அப்படி தான் தற்போது அஜித்குமார் நடிப்பில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வரும் குட் பேட் அக்லி படத்திலும் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தபட்டிருந்தது. ஆனால், அதற்கு உரிய அனுமதியை தயாரிப்பு நிறுவனம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, குட் பேட் அக்லி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டிஸில் தான் இசையமைத்த பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக புகார் தெரிவித்ததோடு 3 பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அதற்கு ரூ.5 கோடி இழப்பீடு வேண்டும் அப்படி இல்லை என்றால் பாடல்களை நீக்கவேண்டும் இல்லையெனில் வழக்கு தொடர்வேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சூழலில், பாடலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் நீக்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு தான் ஏனென்றால், அந்த ரெட்ரோ பாடல்கள் அந்த காட்சிகளுக்கு செட் ஆகியுள்ள காரணத்தால் மக்கள் ரசித்துவருகிறார்கள். எனவே, இளையராஜா கேட்ட தொகையை வழங்கும் அல்லது அவருடன் பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருந்த காரணத்தால் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 180 கோடி தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.