இந்த மாதிரி நடிங்க ப்ளீஸ்…விக்ரமுக்கு வேண்டுகோள் வைத்த எஸ்.ஜே.சூர்யா!
வீரதீரசூரன் திரைப்படம் எமோஷனலாக இருக்கும் என நடிகர் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

சென்னை : விக்ரம் நடித்துள்ள வீரதீரசூரன் திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
விழாவில் பேசிய விக்ரம் படம் எப்படி பட்ட படமாக இருக்கும் என்பது பற்றி பேசினார். இது குறித்து பேசிய அவர் ” ரொம்ப நாட்களாகவே நான் ரசிகர்களுக்காக ஒரு படம் செய்யவேண்டும் என யோசித்துக்கொண்டு அதற்கான கதைகளை இயக்குனர்களிடம் கேட்டுக்கொண்டு இருந்தேன். அப்போது தான் எனக்கு அருண் குமார் வீரதீரசூரன் படத்தின் கதையை சொன்னார். கதையை கேட்டவுடன் எனக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டேன்.
சேதுமாதிரி ஒரு படமாகவும் சித்தா மாதிரி ஒரு கலந்த படமாக இந்த படம் இருக்கும். செம ரகலையாக இருக்கும் அதே சமயம் எமோஷனலாகவும் மக்களுக்கு இந்த படம் கனெக்ட் ஆகும் என்பதால் இந்த படத்தை நான் தேர்வு செய்து நடித்தேன். கண்டிப்பாக படத்தை வந்து பாருங்கள் நல்ல விஷயங்கள் இருக்கிறது” எனவும் படம் எப்படி இருக்கும் என்பது பற்றி நடிகர் விக்ரம் பேசியிருந்தார்.
அவரை தொடர்ந்து பேசிய எஸ்.ஜே. சூர்யா படம் குறித்து மட்டும் பேசாமல் முக்கியமாக வேண்டுகோள் ஒன்றையும் முன் வைத்தார். இது தொடர்பாக பேசிய அவர் ” ரொம்ப நாள் கழித்து நாம் கமர்ஷியலான விக்ரமை இந்த படத்தில் பார்க்க போகிறோம். தூள் படத்தில் இருந்த விக்ரத்தை எப்படியோ ரீ கிரியேட் செய்து இந்த படத்தின் மூலம் கொண்டு வந்திருக்கிறார்கள். விக்ரம் சார் விக்ரமாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். நான் அவரிடம் ஒண்ணே ஒன்னும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் நீங்களாவே இது போன்ற கமர்ஷியல் படத்தில் அதிகமாக நடிக்கவேண்டும் உங்களுடைய ரசிகர்களுக்காக” எனவும் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.