என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!
அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என அஜித்குமார் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது பற்றி விவரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் அஜித்குமார் உட்பட 19 பேர் பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு விருதும் நேற்று டெல்லியில் வைத்து வழங்கப்பட்டது.
வழக்கமாக எந்த விருது வழங்கும் விழாவிற்கும் வருகை தராத அஜித்குமார் இந்த விருதை வாங்கிக்கொள்வதற்கு நேற்று காலை தனது குடும்பத்துடன் டெல்லிக்கு வருகை தந்திருந்தார். வருகை தந்த அவருக்கு பத்மபூஷன் விருதையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தும் வருகிறது.
விருது பெற்றுக்கொண்டதை தொடர்ந்து அடுத்ததாக இந்தியா டூடே நிறுவனத்திற்கு தனிப்பட்ட முறையில் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசினார். இது குறித்து பேசிய அவர் ” நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால், இன்னும் இந்த விருது என் மனதில் முழுமையாகப் பதியவில்லை. நான் இதயத்தில் இன்னும் ஒரு சாதாரண மனிதராக தான் நிற்பது போல இருக்கிறது.
இருந்தாலும் இந்த விருதினை வாங்கியதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாகவும், உணர்ச்சியாகவும் இருக்கிறேன். இந்த மாதிரி விருதுகளை வாங்கும்போதும் தான் நாம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம் என தெரிகிறது. எனவே, நான் சரியான பாதையில் இருப்பதாக உணர்கிறேன். அதனால், எனது வேலையில் கவனம் செலுத்தி, எனது பணி நெறிமுறைகளைப் பின்பற்றி முன்னோக்கி செல்கிறேன்.
என்னுடைய மிகப்பெரிய பலம் எனது பெற்றோர்கள் எனது சகோதரர்கள் ஷாலினி மற்றும் எனது குழந்தைகள். என்னுடைய மனைவி ஷாலினி எப்போதும் என்னுடைய தூணாக உள்ளார். எனக்காக நிறைய விஷயங்களை தியாகம் செய்துள்ளார். நல்லதோ கெட்டதோ என்னுடன் இருந்த எனது ரசிகர்களின் அளவற்ற அன்புக்கு நன்றி என் இதயத்திற்குள் நான் ஒரு மிடில் கிளாஸ் தான்.
நான் ஒரு நடிகன், இது எனக்கு ஒரு வேலை. இதற்காக எனக்கு ஊதியம் கிடைக்கிறது. இதைத் தவிர வேறு எதையும் நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை” எனவும் அஜித்குமார் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அதனைத்தொடர்ந்து பத்மபூஷன் விருது பெற்று சென்னை விமான நிலையம் திரும்பிய நடிகர் அஜித்குமார் விருது குறித்த கேள்விக்கு அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் எனவும் பேசிவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.