ராஜாதி ராஜன் இந்த ராஜா..லண்டனில் சாதனை படைக்கவுள்ள இளையராஜா! குவிந்த வாழ்த்துக்கள்!
இசையமைப்பாளர் இளையராஜா இன்று ‘வேலியன்ட்' என்ற தலைப்பில் உருவாக்கிய ‘சிம்பொனி'யை அரங்கேற்றவுள்ளார்.

லண்டன் : இசையமைப்பாளர் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்கிற சாதனையை தமிழ் சினிமாவில் ஏற்கனவே படைத்திருந்தார். இந்த சாதனையை அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே படைத்துவிட்டார். அந்த பெரிய சாதனையை தொடர்ந்து ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையும் படைத்தது அசத்தி இருக்கிறார்.
சிம்பொனி பற்றி
கடந்த 1993ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து ஒரு சிம்பொனியை இளையராஜா உருவாக்கினார். இது ஆசியாவிலிருந்து ஒரு இசையமைப்பாளரால் முதன்முதலாக இசையமைக்கப்பட்ட சிம்பொனி என்ற பெருமையைப்அப்போதே பெற்றது. இருப்பினும் அந்த சமயம் அந்த சிம்பொனி முழுமையாக வெளியிடப்படவில்லை என்பதால் எப்போது இது வெளியிடப்படும் என அந்த சமயம் கேள்விகள் எழும்பியது.
இதனையடுத்து, இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, 2024 ஆம் ஆண்டு அக்டோபரில், இளையராஜா தனது “Symphony No. 1″ ஐ லண்டனில் பதிவு செய்ததாகவும், அது 2025 ஜனவரி 26 அன்று வெளியிடப்படும் என்றும் அறிவித்தார். அதன்பிறகும் பின்னணி வேலைகள் (Editing, Mixing, Mastering) காரணமாக வெளியீடு தாமதம் ஆனது.
இன்று ‘வேலியன்ட்’ (Valiant) சிம்பொனி
இந்த சூழலில் ஒரு வழியாக இளையராஜா சிம்பொனி இசையை உருவாக்கி முடித்துவிட்டார். ‘வேலியன்ட்’ (Valiant) என்ற பெயரில் உருவாகியுள்ள அது இன்று வெளியிடப்படவும் இருக்கிறது. 34 நாட்களில் இந்த சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து இதை நேரடியாக இன்று வழங்கவிருக்கிறார். இதற்கான இசை நிகழ்ச்சி இன்று மார்ச் 08, 2025 அன்று லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இளையராஜாவின் நீண்ட நாள் கனவு இது தான் என்பதால் இதற்காக அவரும் அவருடைய ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.