எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் சாதாரனமாக சினிமாவுக்குள் வரவில்லை என நடிகர் ஷாம் சமீபத்திய பேட்டி ஒன்றில் நெகிழ்சியுடன் தெரிவித்துள்ளார்.

சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது. அவருடைய வளர்ச்சி குறித்து பிரபலங்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பேசுவது உண்டு. அந்த வகையில், ஒரு காலத்தில் சிவகார்த்திகேயனை போல வளர்ந்து கொண்டு இருந்த நடிகர் ஷாம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய சினிமா பயணம் எனக்கு சிறப்பானதாக அமையவில்லை என்று தான் சொல்வேன். ஏனென்றால், மூன்று வருடங்கள் நான் சீரமைப்பட்டு தான் வந்தேன். ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் மட்டும் இல்லை சினிமாவில் இருக்கும் பலரும் இப்படியான கஷ்டங்களை சந்தித்திருப்பார்கள். எடுத்துக்காட்டாக சொல்லவேண்டும் என்றால் சிவகார்த்திகேயனை சொல்லலாம்.
எதற்காக அவரை சொல்கிறேன் என்றால் தொலைக்காட்சி பக்கம் கடினமாக உழைச்சு, கஷ்டப்பட்டுதான் இன்னைக்கு இந்த இடத்துல இருக்காரு. அவர் போட்டியாளராக இருந்த பல நிகழ்ச்சிகளில் நான் நடுவராக இருந்திருக்கிறேன். அந்த சமயங்களில் நான் அவரிடம் பலமுறை கூறியிருக்கிறேன். உங்களுடைய காமெடி சென்ஸ் சூப்பராக இருக்கிறது. குழந்தைகளுக்கு உங்களை பிடித்திருக்கிறது என கூறினேன்.
பலரும் அவருடைய வளர்ச்சியை ஆச்சரியமாக தான் பார்ப்பார்கள். ஆனால், அன்னைக்கே நான் அதை கணிச்சேன். இப்படியான ஒரு இடத்திற்கு அவர் வருவார் என எனக்கு முன்பே தெரியும்” எனவும் ஷாம் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து கொண்டு இருக்கிறார். இன்னுமே அதைப்போல தொடர்ச்சியாக செய்யவேண்டும்” எனவும் ஷாம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.