உதயநிதி படத்தால் விஜய் படத்தை இழந்த விடாமுயற்சி இயக்குநர்! அவரே சொன்ன வேதனை கதை!
விஜய்யை சந்தித்து நான் 3 கதைகளை கூறியிருக்கிறேன் என இயக்குநர் மகிழ்திருமேனி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் மகிழ்திருமேனி தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இயக்குநர் மகிழ்திருமேனி சமூக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் விஜய்க்கு சொன்ன கதை பற்றியும் விஜய்யுடன் அவர் இணைந்து பணியாற்ற முடியாமல் போன தகவலையும் பகிர்ந்துகொண்டார். இது குறித்து பேசிய அவர் ” நான் விஜய் சாரை சந்தித்து கிட்டத்தட்ட 3 கதைகள் சொன்னேன். அந்த மூன்று கதைகளும் ஆக்சன் கலந்த திரில்லர் வடிவமைப்பு கொண்டதாக இருக்கும்.
அந்த 3 கதைகளை நான் முதலில் வேகமாக சொல்ல ஆரம்பித்தேன். அவருக்கு நான் சொன்ன லைன்ஸ் மிகவும் பிடித்தது. அடுத்ததாக, நான் டீ போட்டு வருகிறேன் குடித்துக்கொண்டே பேசுவோம் என கூறினார். பிறகு அவர் தன்னுடைய கையால் டீ போட்டுகொண்டு எனக்கு கொடுத்தார். நான் குடித்துவிட்டு மீண்டும் கதையை சொல்ல ஆரம்பித்தேன். நான் சொன்ன 3 கதைகளையும் கேட்டு முடித்துவிட்டு நீங்கள் என்னை குழப்பிவிட்டிர்கள் எந்த கதையை செய்யலாம் என்று என சொன்னார்.
பிறகு கதை கூறி முடித்து அவரும் ஒரு படத்தில் நடித்து முடித்தார். அதன்பிறகு அவருடைய தரப்பில் இருந்து எனக்கு போன் வந்தது. நான் அந்த சமயம் கலகத்தலைவன் படத்தை இயக்கி கொண்டு இருந்தேன். இந்த விஷயத்தை நான் விஜய் சாரிடம் சொன்னேன். உடனடியாக அவரும் நானும் அதற்குள் ஒரு படத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறி வேறொரு (பீஸ்ட்) படத்தில் நடித்தார். அதன்பிறகு அப்படியே அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட் ஆன காரணத்தால் அவருடன் இணைந்து படம் செய்யமுடியவில்லை” எனவும் மகிழ்திருமேனி தெரிவித்துள்ளார்.
முன்னதாக கலகத்தலைவன் படத்தின் விழாவின் போது உதயநிதி ஸ்டாலின் “அவருக்கு ஒரு பெரிய பட வாய்ப்பு வந்தது. நான் அவரிடம் இந்த படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த படத்திற்கு போகவேண்டும்” என கூறியிருந்தார். எனவே, மகிழ்திருமேனி கலகத்தலைவன் படத்தை இயக்காமல் இருந்திருந்தால் விஜய் பீஸ்ட் படத்திற்கு முன் அவருடைய இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.