அனாவசியமான கேள்விகளை கேட்காதீர்கள்! ஏர்போர்ட்டில் கடிந்து கொண்ட இளையராஜா!
இசைக்கோர்ப்பு பணிகளுக்காக லண்டன் செல்லும் முன் இளையராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்படுகிறார். அங்கு ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு (Royal Philharmonic Orchestra) உடன் இணைந்து இசைக்கோர்ப்பு பணிகளில் ஈடுபட உள்ளார். அதற்கு முன்னர் அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.
அப்போது பேசுகையில், எல்லோருக்கும் வணக்கம். உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு லண்டன் அவர்களுடன் சேர்ந்து இசையமைக்க உள்ளேன். அவர்கள் வாசித்து ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்து பிறகு இந்த இசை வரும் 8ஆம் தேதியன்று வெளியிட இருக்கிறோம். அப்பல்லோ அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அங்கு வரும் ரசிகர்களுக்கு இந்த இசை நிகழ்ச்சி விருந்தாக இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. என கூறினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் ஒரு தமிழனாக எப்படி உணர்கிறீர்கள்? என கேட்டார். அதற்கு பதில் அளித்த இளையராஜா, “ஒரு நல்ல மனிதனாக நன்கு உணர்கிறேன். இப்படி இடைஞ்சலான கேள்விகளை கேட்காதீர்கள். ஒரு நல்ல விஷயத்திற்காக செல்கிறேன். நல்லபடியாக வாழ்த்தி இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்” என பேசினார்.
அடுத்து இடைமறித்து இன்னொரு செய்தியாளர் கேள்வி எழுப்பவே, “இப்போது நான் பேச வேண்டுமா நீங்கள் பேச வேண்டுமா?” என லேசாக புன்முறுவலோடு கடிந்து கொண்டார். “இது என்னுடைய பெருமை அல்ல நாட்டின் பெருமை. என்னை போல் யாரும் இல்லை. இனி வரப்போவதுமில்லை .” எனக்கூறினார்.
அடுத்து, இசையமைப்பாளர் தேவா தன்னுடைய பாடல்களை எல்லோரும் இலவசமாக கேட்கலாம் என கூறியது பற்றி கேட்கையில், “அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்.” என கடிந்து கொண்ட இளையராஜா, ” நான் என்னுடைய வேளையில் கவனமாக இருக்கிறேன். நீங்ள் உங்கள் வேலையில் கவனமாக இருப்பது உங்களுக்கு தான் தெரியும். உங்கள் மேல் வருத்தம் இல்லை. நீங்கள் எல்லாரும் சேர்ந்தது தான் நான். உங்கள் பெருமைகளை அங்கு கொண்டு சென்று சேர்க்க போகிறேன். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் இறைவன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.” என செய்தியாளர் சந்திப்பில் இளையராஜா பேசினார்.