GT4 ஐரோப்பிய கார் ரேஸில் மாஸ் காட்டிய அஜித் அணி! 2-வது இடத்தை பிடித்து சாதனை!
கார் பந்தயத்தில் இந்தியாவின் பெருமைமிக்க தருணம் என அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் கார் பந்தயங்களிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பா-பிரான்கோர்சாம்ப்ஸ் மைதானத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் அஜித் அணி கலந்துகொண்டது.
இந்தப் பந்தயத்தில் 46 கார்கள் பங்கேற்றன, இதில் அஜித் குமாரின் அணி மற்ற அணிகளை விட சிறப்பாக விளையாடி 2-வது இடத்தை பிடித்தது. அவருடைய ரேசிங் அணி, பாஸ் கோட்டன் ரேசிங் உடன் இணைந்து, தொழில்நுட்ப மற்றும் லாஜிஸ்டிக் திறன்களைப் பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டது. பந்தயத்தில், 45 அணிகள் இரண்டு ஓட்டுநர்களைக் கொண்டிருந்தபோது, அஜித் தனியாகப் பங்கேற்று, கட்டாய பிட் ஸ்டாப்களை திறமையாகக் கையாண்டார்.
GT4 ஐரோப்பிய தொடர், SRO மோட்டார்ஸ்போர்ட்ஸ் குழுமத்தால் நடத்தப்படும் ஒரு முதன்மையான சாம்பியன்ஷிப் ஆகும், இது அமெச்சூர் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முறை ஓட்டுநர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. இந்தப் பந்தயத்திற்கு முன், அஜித் குமார் அணி 24H துபாய் 2025 இல் மூன்றாம் இடத்தையும், 12H முகெல்லோ 2025 இல் மற்றொரு மூன்றாம் இடத்தையும் பெற்று அசத்தி இருந்தது.
அதனை தொடர்ந்து இப்போது GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் 2-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும், அஜித் குமார் ரேசிங் அணி சான்ட்வூர்ட், மிசானோ, நியூர்பர்க்ரிங், மற்றும் பார்சிலோனா ஆகிய பந்தயங்களில் பங்கேற்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.