ஹிந்தி திரையுலகில் பெரும் சோகம்! நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் காலமானார்!
தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மனோஜ் குமார் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது 87வது வயதில் காலமானார். உடல் நலக்குறைவு மற்றும் வயது முப்பு காரணமாக இன்று, ஏப்ரல் 4, 2025 காலை 5 மணியளவில் அவர் தனது இறுதி மூச்சை விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1967இல் “உப்கார்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், “புரப் அவுர் பச்சிம்” (1970), “ஷோர்” (1972), மற்றும் “ரோட்டி, கபடா அவுர் மகான்” (1974) போன்ற படங்களையும் இயக்கி அதில் நடித்திருக்கிறார். “ரோட்டி, கபடா அவுர் மகான்” 1974ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது, அதில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களும் படத்தில் நடித்திருந்தார்கள்.
அதைப்போல, அவர் இயக்கிய “கிராந்தி” (1981) அவரது மற்றொரு முக்கியமான படைப்பாகும், இது சுதந்திரப் போராட்டத்தை மையமாகக் கொண்டு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. எனவே, இப்படி பட்ட ஒருவரின் மறைவு இந்திய திரையுலகத்திற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மனோஜ் குமார் நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே, நேற்று இதன் காரணமாக அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய இறப்புக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது படைப்புகள், குறிப்பாக சமூக பிரச்சினைகளையும் தேசபக்தியையும் பேசியவை, இன்றும் மக்களிடையே பேசப்படும் ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.