உலுக்கும் பாலியல் புகார்கள்: நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மீது வழக்குப்பதிவு!
திருவனந்தபுரம் : கேரள சினிமாவை உலுக்கும் பாலியல் புகாரில், மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் பிரபல நடிகை ஒருவர், மாஃபியா கும்பலால் காரில் கடத்தப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டார். கடந்த 2017ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப் போட்டது. இதனை தொடர்ந்து கேரள அரசு அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி, அதன் அறிக்கை அறிக்கை வெளியாட்டதும் சில நடிகைகள் துணிச்சலுடன் பேச முன்வந்து விட்டனர்.
அதன்படி, பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவர்களை விசாரிக்க ஏழு பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை நிறுவுவதாக ஆகஸ்ட் 25 அன்று அம்மாநில அரசு அறிவித்தது. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக, இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
சிறப்பு விசாரணை குழுவிடம் நடிகை அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து எர்ணாகுளம் ஆலுசா பகுதியில், உள்ள நடிகையின் வீட்டில் நேற்று விசாரணை நடைபெற்றது. அதன் அடிப்படையில், மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது, ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவின் கீழ், திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல், நடிகரும், கொல்லம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி MLA-வுமான முகேஷ் மீதும் கொச்சி மரடு போலீசார் இதே பிரிவின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே, இயக்குனர் ரஞ்சித், நடிகர் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது பாலியல் வழக்கு பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகேஷ்
நேற்று (புதன்கிழமை) இரவு கொச்சி நகரில் உள்ள மரடு காவல் நிலையத்தில் நடிகர் முகேஷ் மீது ஐபிசி 376 சட்டத்தின் கீழ், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான 3வது குற்றச்சாட்டு இதுவாகும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக பெண் நடிகை ஒருவர் கூறியதைத் தொடர்ந்து, பிரபல மலையாள நடிகரும், ஆளும் சிபிஐ(எம்) எம்எல்ஏவுமான எம்.முகேஷ் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயசூர்யா
கழிவறையில் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக நடிகை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் ஜெயசூர்யா மீது, ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்தனர். நடிகர் ஜெயசூர்யா மீது இரண்டாவது பாலியல் வழக்கு இதுவாகும்.
சித்திக்
முன்னதாக, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டல் ஒன்றில் நடிகையை பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, நடிகர் சித்திக் மீது திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீஸார் நேற்றைய தினம் (புதன்கிழமை) பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்தனர்.
இது முதல் பாலியல் வழக்கு இதுவாகும். இதனிடையே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை அடுத்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் பதவியையும் சித்திக் ராஜினாமா செய்தார்.