ஆபாச பேச்சு: மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த புகாரில் தொழிலதிபர் கைது!
நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் செம்மனூர் ஜுவல்லரி அதிபர் பாபி கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம் மத்திய போலீசார், அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர் வயநாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கண்ணுரில் செம்மனூர் நகைக்கடை திறப்பு விழாவில் ஆபாச கருத்துகள் தெரிவித்ததாக பாபி செம்மனூர் மீது, நடிகை ஹனிரோஸ் புகார் அளித்திருந்தார். ஏற்கனவே, தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்திற்கு அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளதாக நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரில், 27 பேர் மீது கேரளாவின் எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஓராண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையிலான சட்டப்பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்றைய தினம், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மாநில காவல்துறைத் தலைவருடன் ரோஸ் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர் (கள்) மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்ததாக நடிகை ஹனிரோஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.