வெடிமருந்துகளால் விலங்குகளை துன்புறுத்தல்.. ‘காந்தாரா’ படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு!
காந்தாரா-1' படப்பிடிப்பின்போது வெடி பொருட்கள் மூலம் காடுகள் சேதமாக்கப்படுவதாக படக்குழு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கர்நாடகா: இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது மரங்களை வெடி வைத்து வெட்டியதாக படக்குழுவினர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சூப்பர்ஹிட் திரைப்படமான ‘கந்தாரா’ திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஆக்ஷன் காட்சி, சுவாரசியமான கதை மற்றும் ரிஷப் ஷெட்டியின் பிரமாண்டமான நடிப்பு திரைப்படத்தை தலைசிறந்த படைப்பாக மாற்றியது.
இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் ‘காந்தாரா: அத்தியாயம் 1’ உருவாகுவதாக அறிவித்துள்ளனர். இப்பொது, காந்தாரா 1-இல் பிரமாண்டமான ஆக்ஷன் இருக்கும், பிரமாண்ட போர் காட்சியின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவின் சகலேஷ்பூர் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பின்போது வெடி பொருட்கள் மூலம் காடுகள் சேதமாக்கப்படுவதாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விலங்குகள் மற்றும் பறவைகள் துன்புறுத்தப்படுவதாகவும் கிராம மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸுக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.