“கேப்டன் எங்கள் குடும்ப சொத்து அல்ல, மக்கள் சொத்து” பிரேமலதா நெகிழ்ச்சி!
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து விஜயகாந்தின் தீவிர ரசிகன் என்பதால், படம் நெடுக கேப்டன் விஜயகாந்தை நினைவூட்டியுள்ளார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கிய ‘லப்பர் பந்து’ படம் செப்டம்பர் 20ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக ஹரீஷ் கல்யாணும், தினேஷும் மோதிக் கொள்கின்றனர். அவர்களின் ஈகோவால் காதல் உடைந்தநிலையில் என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை.
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து விஜயகாந்தின் தீவிர ரசிகன் என்பதால், இந்த படத்தில் வீட்டின் சுவரில் கேப்டன் சித்திரம், பைக்கில் கேப்டன் ஸ்டிக்கர் என பல முறை கேப்டன் விஜயகாந்தை நினைவூட்டியுள்ளார்.
கிராமத்தில் நடக்கும் ஒரு நகைச்சுவையான, உணர்வுபூர்வமான குடும்பம் கலந்த கிரிக்கெட் படமான ‘லப்பர் பந்து’ படத்தை பார்த்திவிட்டு பிரேமலதா விஜயகாந்த் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
பிரபல ஊடகம் ஒன்றிக்கு பேட்டியளித்த பிரேமலதா, “குடும்பத்துடன் ‘லப்பர் பந்து’ படத்தைப் பார்த்தோம். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், பாடல்களிலும் கேப்டனின் தாக்கம் இருந்தது. கேப்டனின் ரசிகர்கள், ‘தேமுதிக’ தொண்டர்கள் அனைவரும் இப்படத்தைக் கொண்டாடிப் பார்ப்பார்கள்.
திரைப்படங்களில் கேப்டனின் பாடலை, போஸ்டர்களைப் பயன்படுத்தினால் காப்புரிமையெல்லாம் யாரிடமும் கேட்க மாட்டோம். கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து.
‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடல் இப்போது எங்கும் வைரலாகி வருகிறது. இனி வரப்போகிற ஐபிஎல் தொடரிலும்கூட தோனிக்கும் கேப்டன் விஜயகாந்தின் பாடலைத்தான் போட்டு வரவேற்பார்கள்.
‘கோட்’ படத்தில் ஏஐ மூலம் முதல் தடவையாக கேப்டனை கொண்டு வந்தது, ‘லப்பர் பந்து’ படத்தில் யூஸ் பண்ண அளவுக்கு பண்ணல என்கிறது உங்கள் கருத்தாக இருக்கிறது. ஆனா, கோட் படமே கேப்டன் நடித்த ‘ராஜதுரை’ படத்தின் தழுவல் என்று எல்லாரும் சொல்றாங்க.
எனவே படம் வெற்றி பெற்றுவிட்டது. இனிமேல் அதைப் பற்றி கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. கோட் படமும் ரொம்ப நல்ல படம் தான். அவங்களுக்கு என் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
முன்னதாக, இந்த படம் நெடுக கேப்டனோட ரெஃபரென்ஸ் இருந்துகிட்டே இருக்கும். இந்த படம் விஜய்காந்த் அவர்களின் நினைவுகளை நம்முள் உலாவ செய்யும் என இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கூறியது குறிப்பிடத்தக்கது.