“பாலிவுட் அருவருப்பா இருக்கு..தென்னிந்திய சினிமாவுக்கு வரேன்”…அனுராக் காஷ்யப் வேதனை!
பாலிவுட்டை எண்ணி அருவருப்பாக உணர்கிறேன் என அனுராக் காஷ்யப் வெளிப்படையாக பேசியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பாலிவுட்டில் அக்லி, ரைபிள் கிளப், கென்னடி, உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய அனுராக் காஷ்யப் தற்போது நடிப்பிலும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற மகாராஜா படத்தில் கூட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்கத்தை விட்டு விட்டு கதைக்கு சம்பந்தமான படங்களை தேர்வு செய்து நடித்து வருவது தான் அவருக்கு பிடிக்கிறது என்றே சொல்லலாம்.
இருப்பினும், பாலிவுட்டில் தனக்கு அப்படியான படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை எனவே, பாலிவுட் அருவருப்பாக இருக்கிறது என சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாகவே அனுராக் காஷ்யப் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” பாலிவுட் சினிமாவில் அதிகம் பணம் செலவு செய்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கவே எனக்கு பயமாக இருக்கிறது.
ஏனென்றால், பாலிவுட் சினிமாவில் நல்ல உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஆரம்பத்தை போல இப்போது வரவேற்பு கிடைப்பதில்லை. நான் உண்மையில் எங்களுடைய பாலிவுட் சினிமாவை நினைத்து மிகுந்த ஏமாற்றம் அடைகிறேன். பாலிவுட்டை நினைத்தாலே அருவருப்பா இருக்கு.
மலையாளத்தில் கடந்த ஆண்டு `மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற படம் வெளியானது. அது போன்ற ஒரு படம் ஹிந்தியில் வருமா என்று கேட்டால் நிச்சயமாக வராது. ஆனால், அந்த படத்தை வாங்கி ரீமேக் மட்டும் செய்வார்கள். புதிதாக முயற்சி செய்து பார்க்கலாம் என்கிற எண்ணம் ஒரு துளி கூட இங்கு கிடையாது. மக்களுக்கு ஏற்கெனவே பிடித்த விஷயங்களை வைத்து திரைப்படத்தை தொடர்ந்து எடுக்கிறார்கள். எனவே, நான் இந்த ஆண்டு மும்பையில் இருந்து வெளியேற முடிவெடுத்திருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க விரும்புகிறேன்” எனவும் அனுராக் காஷ்யப் வேதனையுடன் பேசியுள்ளார்.