பரபரப்பு!! பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!
மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டிற்குள் புகுந்த திருடன், நடிகர் சைஃப் அலிகானைக் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் இரவில் தூங்கியபோது, மர்ம நபர் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்தார். கூர்மையான ஆயுதத்தால் அவரைக் குத்தினார். சயிப் அலிகானின் அலறல் சத்தத்தை கேட்டு, குடும்பத்தினர் வந்ததும் அவர் தப்பியோடி விட்டார்.
கத்திக் குத்தில் காயமடைந்த சயிப் கான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வீட்டில் இரவில் 2.30 மணிக்கு திருடன் ஒருவன் புகுந்துள்ளான் என்றும், அவனை சயிப் அலிகான் பார்த்துவிடவே, 2 பேருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதில், சயிப் அலிகானை 6 இடங்களில் திருடன் குத்தியதாகவும், மொத்தம் 2 குத்து, உடலில் ஆழமாக பாய்ந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதில் ஒரு குத்து, முதுகு தண்டவடம் அருகே விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கத்திக் குத்தில் காயமடைந்த சயிப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நரம்பியல் நிபுணர் நிதின் டாங்கே உள்ளிட்டோர் கொண்ட மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சையை செய்து வருகிறது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகே, அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த முழுத் தகவலையும் தெரிவிக்க முடியும் என்று மருத்துவமனை தரப்பு கூறியுள்ளது.
இந்த நிலையில், தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரது வீட்டின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய சில மாதங்களுக்குப் பிறகு சைஃப் அலி கான் மீதான இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.