இலங்கையில் சிங்களவர்களால் மதுரையை எரித்த கண்ணகி ஏன் கொண்டாடப்படுகிறாள்….?
சிங்களவர், தமிழர் எனப்படுவோர், பேசும் மொழியால் மட்டும் மாறுபட்ட, ஒரே பண்பாட்டை பின்பற்றும், ஒரே இனத்தை சேர்ந்த மக்கள். இதில் யாருக்காவது சந்தேகம் இருப்பின் “பத்தினி” சிங்களத் திரைப்படத்தை பார்க்கவும். எல்லோருக்கும் தெரிந்த அதே கோவலன்-கண்ணகி கதை தான் சிங்களத்தில் படமாக்கப் பட்டுள்ளது.
சிலம்போடு கண்ணகி மதுரையை எரித்தது வரையில் கதையில் எந்த மாற்றமும் இல்லை. வசனங்களும் அப்படியே உள்ளன. இளங்கோவடிகள் எழுதிய காவியம் என்பதும் குறிப்பிடப் படுகின்றது. ஆனால் கதையின் இறுதிப் பகுதி மாறுகிறது. கஜபா மன்னன் காலத்தில், கண்ணகி வழிபாடு எவ்வாறு இலங்கைக்கு வந்தது என்பதில் இருந்து தான், சிங்களவர்களின் வரலாற்றுக் கதை பிரிகின்றது.
வடக்கு முதல் தெற்கு வரை, இலங்கையில் இன்றைக்கும் கண்ணகி வழிபாடு நடைபெறும் கோயில்கள் உள்ளன. சிங்களவர்கள் அதனை “பத்தினித் தெய்வம்” என்று சொல்லி வணங்குகிறார்கள். சிங்களவர்களும் முன்னொருகாலத்தில் இந்துக்களாக இருந்தவர்கள் தான். அவர்கள் இப்போதும் புத்தரை மட்டும்ல்லாது இந்துத் தெய்வங்களையும் வழிபடுகிறார்கள்.
மாதவியின் மகள் மணிமேகலை புத்த பிக்குனியாக மாறியதாலும், கண்ணகி கதையின் முடிவில் தொடங்கிய பௌத்த மத மரபு, இப்போதும் இலங்கையில் தொடர்வதாக சிங்களவர்கள் உரிமை கோருகின்றனர். தமிழ் நாட்டில் இருந்து அகதிகளாக வெளியேறி இலங்கையில் அடைக்கலம் கோரிய தமிழ் பௌத்தர்கள் பிற்காலத்தில் சிங்களவர்களாக மாறிய வரலாறும் இவ்விடத்தில் நினைவுகூரத் தக்கது.