பிக் பாஸ் சீசன் 8 : கமல்ஹாசன் இடத்தை பூர்த்தி செய்வாரா விஜய் சேதுபதி?
பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள நிலையில், கமல்ஹாசன் இடத்தை பூர்த்தி செய்யும் அளவுக்கு செயல்படுவாரா? என கேள்விகள் எழுந்துள்ளது.
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது. இதுவரை 7 சீசன்களை தொகுத்து வழங்கி, வந்த கமல்ஹாசன் பட வேலைகள் காரணமாக இந்த சீசன் தான் தொகுத்து வழங்கவில்லை எனக் கூறி, தற்காலிகமாக விலகிக் கொள்வதாக அறிவித்து இருந்தார். அவரை தொடர்ந்து நிகழ்ச்சியின் புது தொகுப்பாளராக விஜய் சேதுபதி செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவும் வெளியாகி அதில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க என்ன செய்யலாம் என மக்கள் அவருக்கு அறிவுரை கொடுப்பது போலக் காட்டப்பட்டிருந்தது. அவர், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருந்தாலும், மற்றொரு பக்கம் அவர் கமல் அளவுக்கு நிகழ்ச்சியைக் கொண்டுபோவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனென்றால், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவேண்டும் என்றால், தினமும் வீட்டிற்குள் என்ன நடக்கிறது யார் சரியாக இருக்கிறார்? யாருக்கு ஆதரவாகப் பேசவேண்டும் என்பதெல்லாம் பார்த்து கவனமாகப் பேசவேண்டும். இதைக் கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் சரியாகச் செய்து வந்தார். கடைசியாக நடந்து முடிந்த 7-வது சீசனில் கமல்ஹாசன் மாயாவுக்கு ஆதரவாகப் பேசிய காரணத்தால் கமல்ஹாசனின் ட்ரோல்களுக்கு உட்படுத்தப்பட்டார்.
இருப்பினும், அந்த கடினமான சூழலில் கூட அதனைச் சரியாகக் கையாண்டு அதிலிருந்து வெளியே வந்துவிட்டார். அவருடைய இடத்தில் வேறு யாரவது இருந்தால் இந்த அளவுக்கு நிகழ்ச்சியைக் கொண்டு போகமுடியுமா? என்கிற அளவுக்கு பிக் பாஸ் சின்னமாகவே இருக்கிறார். எனவே, அவருடைய இடத்திற்கு இப்போது வந்திருக்கும் விஜய் சேதுபதி அதனை முழுவதுமாக பூர்த்தி செய்வாரா? என்பது தான் மிகப்பெரிய கேள்வி..
விஜய் சேதுபதிக்கு கமல்ஹாசனின் அளவுக்கு அனுபவம் இல்லை என்றாலும், விஜய் சேதுபதியின் பேச்சு மக்களுக்குப் பிடிக்கும். தனக்கு தோணும் கருத்துக்களை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகவே தெரிவித்து விடுவார். எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் அவரும் தனித்துவமான பாணியைக் கொண்டு வந்து மக்களைக் கவர்வார் எனக் கூறப்படுகிறது.
மேலும், விஜய் சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது குறித்து மக்களுடைய கருத்தாக இருக்கும் சில விஷயங்கள் என்னவென்றால், முதலாக வெளியான ப்ரோமோவில் சொன்னது போல, நியாயமாகவும், உண்மையாகவும் இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்கவேண்டும் என்பது தான்.
அதுமட்டுமின்றி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் இறுதி நாட்களில் மட்டும் வீட்டில் இருப்பவர்கள் தங்களைச் சரியானவர்கள் என்பது போலக் காட்டி பாராட்டு வாங்க வேறுமாதிரி செயல்படுவார்கள் எனவே அதனைப் பார்த்தும் விஜய் சேதுபதி அவர்களுக்கு ஆதரவாகப் பேசிவிடக்கூடாது, உண்மை அறிந்து யார் சரியாக இருக்கிறார்களோ அவருக்கு மட்டும் ஆதரவாகப் பேசவேண்டும் எனவும் கூறி வருகிறார்கள்.
மக்கள் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொண்டும், பார்த்துக்கொண்டு விஜய் சேதுபதி தன்னுடைய பாணியில் பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கொண்டு செல்லலாம். அதற்கான எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் விமர்சனங்களை எதிர்கொண்டாலும் அதனை எளிதாக கையாண்டு, கமல் இடத்தை பூர்த்தி செய்யும் அளவுக்குக் கொண்டு செல்வாரா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.