ஆச்சரியமூட்டிய அயலான்! மிரள வைக்கும் தமிழக வியாபாரம்!
சிவகார்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 90 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் வெளியாக உள்ளது. இந்த அயலான் திரைப்படத்தினை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, பால சரவணன், பானுப்ரியா, கருணாகரன், இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் என்ன நடக்கும் என்பதனை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் திரையரங்கு விற்பனை உரிமை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
அயலான் படம் இத்தனை கோடிக்கு விற்பனையா? சாதனை படைத்த சிவகார்த்திகேயன்!
சமீபத்தில் படத்தின் வெளிநாட்டு திரையரங்கு உரிமையை சொப்பன சுந்தரி திரைப்படத்தை தயாரித்த ஹம்சினி என்டர்டெயின்மென்ட் வாங்கி இருந்தது. கிட்டத்தட்ட 12 கோடிகளுக்கு மேல் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது படம் தமிழகத்தில் எவ்வளவு கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது.
அதன்படி, அயலான் திரைப்படம் சென்னையில் மட்டும் 4 கோடிக்கும், செங்கல்பட்டு 10 கோடிக்கும், திருநெல்வேலியில், 2 கோடிக்கும், கோவையில் 6 கோடி, மதுரையில் 5 கோடிக்கும், திருச்சியில் 4 கோடியும், நார்த் செளத் 5 கோடியும், சேலத்தில் 3 கோடிக்கும் விற்பனை ஆகியுள்ளது. இன்னும் சில மாவட்டங்களில் படத்தின் திரையரங்கு உரிமை விற்கப்படவுள்ளது.
இதன் மூலம் அயலான் படம் வெளியாவதற்கு முன்னதாகவே வெளிநாட்டு திரையரங்கு விற்பனை தொகை 12 கோடியும், தமிழக திரையரங்கு உரிமை இதுவரை 39 கோடியையும் சேர்த்து 51 கோடிகள் வரை படம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளியாவதற்கு முன்பே இந்த அளவிற்கு விற்பனை ஆகியுள்ளது என்றால் படத்தில் கண்டிப்பாக எதோ பெரிதாக இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.