‘தி கோட்’ வசூலை பீட் செய்த ‘அமரன்’.. புதிய அத்தியாயத்தை தொடங்கும் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் படம் திரையரங்குகளில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘அமரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட் படமாக மாறியுள்ளது. குறிப்பாக, சிவகார்த்திகேயனின் கேரியரிலும் அதிக வசூல் செய்த படமாக அமரன் உருவெடுத்துள்ளது.
ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி தவிர, புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன், கீதா கைலாசம், உமைர் இபின் லத்தீப் மற்றும் பலர் நடித்துள்ளனர்
இந்த திரைப்படம் 19 நாள்களை கடந்து இன்னும் வெற்றிநடை போடுவதால், வருகின்ற நாட்களில் ரூ.400 கோடி வரை பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது அமரன் திரைப்படம் 19 நாட்களில் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் என்று பேசப்பட்டு வந்த நிலையில், இந்த வசூல் மூலம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், விஜய்யின் ‘தி கோட்’ படத்தின் வசூலை அமரன் வசூல் தாண்டியதாக கூறப்படுகிறது.
ஆம், விஜய் நடிப்பில் இந்தாண்டு வெளியான ‘தி கோட்’ மூவி, 19 நாட்களில் உலகளவில் ரூ.244.50 கோடி வசூல் செய்தது. ஆனால், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம், 300 கோடியை தாண்டியுள்ளது. இதன் மூலம், ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய நால்வருக்கு அடுத்த இடமான ஐந்தாவது இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்து விட்டார் என்று சொல்லலாம்.
திரையரங்கு வசூலை தவிர, டிஜிட்டல், சாட்டிலைட் உரிமைகள் வருவாய் உண்டு. இதனால், இந்த திரைப்படம் ராஜ்கமல் நிறுவனத்திற்கு கொடுத்திருக்கும் வருவாயால், அவர்கள் தயாரிப்பில் சில படங்கள் மேலும் உருவாக ஒரு வாய்ப்பு இருக்கிறது.