‘அமரன் படத்தில் மொபைல் எண் இடம்பெற்ற காட்சி நீக்கம்’.. உயர்நீதிமன்றத்தில் படக்குழு விளக்கம்!
அமரன் திரைப்படத்தில் காட்டப்பட்ட மாணவரின் மொபைல் நம்பர் நீக்கப்பட்டதாக ராஜ்கமல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் திரைப்படம் டிச,4ம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் படம் வெளியானது.
தீபாவளிக்கு திரையரங்கில் வெளியான அமரன் பெரும் வரவேற்பைப் பெற்று ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி பொறியியல் மாணவர் வாகீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
‘மொபைல் எண் வரும் காட்சியை நீக்கக் கோரி தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் தவறை திருத்தவில்லை. படத்தை ஒடிடி தளத்தில் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்’ என வாகீசன் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சவுந்தர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது, அமரன் படத்தில் இடம்பெற்றிருந்த மாணவனின் செல்போன் எண் தொடர்பான காட்சி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும், காட்சியை நீக்கி புதிய தணிக்கை சான்று பெறப்பட்டுள்ளது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்தது.
ஆனால், தொடர் அழைப்புகளால் தனியுரிமை பாதிக்கப்பட்டதற்கு பொது சட்டத்தின் கீழ் நிவாரணம் கோரலாம் எனவும், ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி பொறியியல் மாணவர் வாகீசன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.