ராயன் வசூலை மிஞ்சிய அமரன்! முதல் நாளிலே மிரட்டல் சாதனை!
அமரன் திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.42 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான அமரன் திரைப்படம் வெளியான முதல் நாளில் வசூல் ரீதியாக சக்கை போடு போட்டுள்ளது. அதன்படி, வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 42 கோடிகள் வசூல் செய்யப்பட்டுள்ளதாகப் படத்தினை தயாரித்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்த ஆண்டு முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையை அமரன் படைத்துள்ளது. முதலிடத்தில் 126 கோடி வசூல் செய்து கோட் படம் உள்ளது. அடுத்ததாக வேட்டையன் படம் 77 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்திலும், இந்தியன் 2 திரைப்படம் 57 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்திலும், 22 கோடி வசூல் செய்து ராயன் படம் 4-வது இடத்திலிருந்தது.
இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு வெளியான அமரன் படம் 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ராயன் படத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாக மாவீரன் படம் தான் இருந்தது. அந்த படம் வெளியான முதல் நாளில் 15 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்திருந்தது.
தற்போது அந்த சாதனையையும் அமரன் படம் முறியடித்து சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் முதல் நாளில் அதிகம் வசூல் கொடுத்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. மொத்தமாக இந்த படம் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. வெளியான ஒரே நாளில் 50 கோடியை நெருங்கியுள்ள காரணத்தாலும், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் பட்ஜெட் தொகையையும் மீட்டெடுத்துவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.