பிரைவேட் பார்ட்டிக்கு அமலாபாலை அழைத்த யார்?
தொழில் அதிபருடன் பிரைவேட் பார்ட்டிக்கு நடிகை அமலாபாலை அழைத்த விவகாரத்தில் மலேசியாவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் சென்னை நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
மலேஷியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமலாபால், அதற்காக கடந்த மாதம் 31-ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள நடனப்பள்ளி ஒன்றில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த அழகேசன் என்ற நபர் அமலா பாலை மலேசியால் தொழில் அதிபர் ஒருவருடன் பிரைவேட் பார்ட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அமலா பாலின் புகாரின் பேரில் அழகேசனைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மலேஷிய நிகழ்ச்சிக்குப் பின் அங்குள்ள தொழிலதிபர் ஒருவருடன் பிரைவேட் பார்ட்டிக்கு அமலாபாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதனை உறுதிப்படுத்திக்கொள்ள பல்லாவரத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தன்னை அனுப்பியதாகவும் தெரிவித்தார்.
அவரது செல்ஃபோனை ஆய்வு செய்த போது பாஸ்கரும் , அழகேசனும் தொடர்பில் இருந்தது தெரியவந்தது- இதனை அடுத்து பாஸ்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்திய விசாரணையில், அமலா பாலை பிரைவேட் பார்ட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்த விவகாரத்தில், மலேசியாவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தனியார் நிறுவனத்தின் சென்னை மேலாளரான ரசாக்குக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
ரசாக்கை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி ரசாக் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் திரைத்துறை முக்கியப்புள்ளி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.