பெண் உயிரிழந்த விவகாரம்: மீண்டும் சம்மன்… இன்று நேரில் ஆஜராகும் அல்லு அர்ஜுன்?
நடிகர் அல்லு அர்ஜுனை மீண்டும் இன்று காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு ஐதராபாத் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி ‘புஷ்பா 2’ சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்கிற பெண் உயிரிழந்தது தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (டிச.24) காலை 11 மணிக்கு சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, ஹைதராபாத் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.
அல்லு அர்ஜுன் ஆஜராகவில்லை எனில் இந்த வழக்கு சிக்கலாகக் கூடும். இதனால், அவர் இன்று காலை நேரில் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே சிறை சென்று ஜாமினில் வெளியே வந்திருக்கும் அவர், மீண்டும் ஆஜராகுமாறு, ஹைதராபாத் போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகை தாண்டி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ஹைதராபாத்தில் உள்ள அல்லு அர்ஜுன் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆனால், அவர்கள் உடனடிகயாக ஜாமினில் வெளிவந்தனர். பின்னர், தாக்குதலில் ஈடுபட்டவர்களில் சிலர் முதல்வர் ரேவந்த் ரெட்டி உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சமூக வலைத்தளத்தில் வெளியானதை தொடர்ந்து, அல்லு அர்ஜுன் கைது, அவர் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு அரசியல் பழிவாங்கல் காரணமா என்று சலசலக்கப்படுகிறது.
இவ்வாறு இந்த விவகாரம் பெரியதாக நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில், ஆஜராகும் நடிகர் அல்லு அர்ஜுனிடம் விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது. இதனால், அவரது ரசிகர்கள் #standwithAlluArjun ஹாஷ்டேக்கில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.