நான் மனித நேயமற்றவனா? ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர்’ – அல்லு அர்ஜுன்!
நான் 22 ஆண்டுகளாக உழைத்து சம்பாதித்த நற்பெயரும், மரியாதையும் ஒரே இரவில் உடைந்துவிட்டது. மிகவும் வருத்தமாக உள்ளதாக அல்லு அர்ஜுன் கூறியுள்ளார்.
ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, ‘போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றதே காரணம்’ என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
திரை பிரபலங்கள் மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்கக் கூடாது என கேட்டுக் கொள்வதாகவும், தான் முதல்வராக இருக்கும் வரை, இனி மாநிலத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தெலங்கானா முதல்வரின் கருத்துக்கள் தன்னை காயப்படுத்தியதாக அல்லு அர்ஜுன் வருந்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் அல்லு அர்ஜுன், “ஹைதராபாத் திரையரங்கில் நடந்தது எதிர்பாராத சம்பவம். இதில் யாருடைய தவறும் இல்லை. பொறுப்பில்லாமல் நான் கூட்ட நெரிசலில் ரோடு ஷோவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
ரசிகர்கள் கூட்ட நெரிசல் அதிமாக இருந்ததால், காரிலிருந்து வெளியே வந்து முகத்தைக் காட்டினால் ரசிகர்கள் அமைதியாவர்கள் என்றுதான் காரின் சன் ரூஃப் கதவைத் திறந்து ரசிகர்களுக்குக் கை அசைத்தேன். நான் தியேட்டருக்கு உள்ளே சென்றபின் கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், சிறுவன் பாதிக்கப்பட்டதாகவும் என்னிடம் கூறினார்கள்.
உடனே அவர்களைப் பார்க்க ஹாஸ்பிட்டலுக்குப் போகலாம் என்றேன். அங்குச் சென்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். சரியான நேரம் வரும்போது போகலாம் என்றார்கள். எனக்கும் குடும்பம் இருக்கிறது. மனைவியின் இழப்பு, குழந்தையின் இழப்பு எவ்வளவு துயரமானது, வலி நிறைந்தது என்று என்னாலும் உணர முடியும்.
மனித நேயமற்றவன், கெட்டவன், மோசமானவன் என என்னை சித்தரிக்க முயல்வதை நிறுத்துங்கள். அது மிகுந்த வருத்தமளிக்கிறது. 22 வருட கடின உழைப்பால் கிடைத்த மரியாதையை இப்படி பேசுவது மிகவும் கவலையளிக்க செய்கிறது.
‘புஷ்பா 2’ படத்திற்காக 3 ஆண்டுகள் உழைத்துள்ளேன். அதற்கு மக்கள் கொடுக்கும் முடிவை திரையரங்கில்தான் பார்க்க முடியும். என்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் நான் திரையங்கிற்கு சென்று ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன என்பதை காண்பேன். அதையேதான் ‘புஷ்பா 2’ படத்திற்கும் செய்தேன்” என்றார்.