மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?
நடிகர் அஜித்குமார் இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை பெற்றுக்கொண்டு நேற்று அஜித், குடும்பத்துடன் சென்னை திரும்பினார். பத்ம பூஷன் விருது வென்ற அஜித்திற்கு விமானத்திலேயே அங்குள்ளவர்கள் கேக் வெட்டி சிறிய பாராட்டு விழா நடத்தினார்.
அதனை அடுத்து சென்னை விமான நிலையம் வந்த அஜித்குமாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவே காரில் ஏறி வீடு திரும்பினார் அஜித்குமார். அதனை அடுத்து தற்போது வெளியான தகவலின்படி அஜித்குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
உடலநலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அஜித்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் உறுதியாக வெளியாகாத நிலையில், நேற்று விமான நிலையத்தில் ரசிகர்கள் தள்ளுமுள்ளு காரணமாக அஜித்திற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் என்று ஒரு செய்தி நிறுவனமும்,
அஜித்துக்கு வயிறு வலி என்று ஒரு செய்தி நிறுவனமும், இது வழக்கமான உடல் பரிசோதனை தான் என ஒரு தரப்பும் கூறி வருகின்றன. அஜித் இதற்கு முன்னரும் வழக்கமான உடல் பரிசோதனை காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.