“அஜித் உடம்பில் ஒரு சின்ன கீறல் கூட இல்லை” – ரேஸிங் அணி வீரர் ஃபேபியன்.!
துபாயில் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய அஜித்துக்கு சிறு காயம் இல்லை என்று ரேஸிங் அணி வீரர் ஃபேபியன் கூறியுள்ளார்.
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சரசரவென்று சுழன்று நின்றது. விபத்து நடந்த உடனே, காரில் இருந்து அஜித் வெளியேறும் காட்சி அனைவருக்கும் நிம்மதி அளித்தது. விபத்தின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
இந்த விபத்தில் அவருக்கு எந்த காயமும் இல்லை என தெரியவந்துள்ளது. ஆம், அவரது போர்ஷே 992 சேதமடைந்தது, ஆனால் அவர் காயமின்றி வெளியே வந்தார். இந்த நிலையில், விபத்தில் சிக்கிய ரேஸர் அஜித் குறித்து தகவலை அஜித் ரேஸிங் அணியின் மேலாளரான டுஃபியக்ஸ் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில், “முதல் நாள் சோதனை முடிந்தது. அஜித் ஒரு கீறல் கூட இன்றி நலமுடன் உள்ளார். கற்பதற்கான பயணம் என்றுமே முடியாது என்பதற்கான ஒரு நினைவூட்டலாக இந்த நாள் இருந்தது. இடையூறுகள் எதுவாக இருந்தாலும் ரேஸிங் மீதான எங்களின் ஆர்வம் ஒவ்வொரு அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ளவும், தொடர்ந்து முன்னேறவும் எங்களை தூண்டுகிறது.
இந்த பாதை பாடங்கள் நிறைந்தது, அதை ஒரு அணியாகவும், குடும்பமாகவும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார். விபத்து வீடியோவைப் பார்த்து கவலைப்பட்டு, என்ன நடந்தது, அஜித் எப்படி இருக்கிறார் என்பதை அறிய ஆவலுடன் இருந்த ஏராளமான அஜித் ரசிகர்களுக்கு இது ஆறுதலான உற்சாகமான தகவலாகும்.
View this post on Instagram