தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

ஃபெப்சி நிர்வாகத்தை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டிக்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Dhanush - Nadigar Sangam

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, ” நடிகர் தனுஷ் முன்பணம் வாங்கிவிட்டு நடிக்க மறுப்பதாக பட அதிபர்கள் அளித்த புகார் குறித்து கூட்டு நடவடிக்கை குழு விரைவாக விசாரணை நடத்தி முடிக்க தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது” என்றார்.

இந்த விவகாரம் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஃபெப்சி நிர்வாகத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஃபெப்சி நிர்வாகத்தை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டிக்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தமிழ்த் திரைப்பட உலகில் ஒட்டுமொத்த மறு சீரமைப்பை கருத்தில் கொண்டு, தென்னிந்திய நடிகர் சங்கம், ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 37 பரிந்துரைகளை, உடனடியாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் வழங்கியது.

நடிகர் சங்க உறுப்பினர் தனுஷ் விஷயத்திலும் தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னெடுத்த முயற்சியால் தீர்வு ஏற்பட்டு, தனுஷ் அவர்களின் படப்பிடிப்பும் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு தனுஷும் வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே, தனுஷ் தொடர்பாக எந்தவித விவாதமும் இல்லாத நிலையில், நேற்று (17.09.2024) திடீரென, தனுஷை விசாரிக்க ஒரு கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியுள்ளதாக ஃபெப்சி நிர்வாகம் பத்திரிக்கை செய்திகள் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

தயாரிப்பாளர்கள்-நடிகர்கள் இடையிலான சிக்கல்களை அந்த இரு அமைப்புகளும் சுமூகமாக கையாண்டு வரும்போது, எந்த முகாந்திரமும் இன்றி ஃபெப்சி நிர்வாகம் வலிய தலையிட்டு, இல்லாத ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது பெரும் கண்டனத்திற்குரியது.

ஃபெப்சி நிர்வாகமே முன்னின்று திரைத்துறை சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு காண்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த முயலும் இந்த செயலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம் தெரிவிக்கிறது” என விரிவாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்