Vishal: லைகா விவகாரம்…நடிகர் விஷால் மீண்டும் ஆஜராக உத்தரவு – சென்னை உயர் நீதிமன்றம்!
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இன்று ஆவணங்களை தாக்கல் செய்யாததால் நடிகர் விஷால் வரும் 22ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக, 21 கோடியே 29 லட்சம் ரூபாயை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றிருந்தது. பிறகு, இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.
இந்நிலையில், விஷாலும், லைகா நிறுவனமும் கடனை ஏற்று செலுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தங்களுக்கு கொடுக்கவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், விஷால் “வீரமே வாகை சூடும்” என்ற படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், லைகா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் கொடுக்க வேண்டிய ரூ.21.29 கோடியில், ரூ,15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் உத்தரவிட்டது.
இதற்கிடையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்நடிகர் விஷால் நடிப்பில் உருவான ‘மார்க் ஆண்டனி’ செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக, லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்தை வெளியீட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நடிகர் விஷால் விளக்கமளித்த நிலையில், மார்க் ஆண்டனி படத்துக்கான தடை நீக்கப்பட்டது. அப்போது, 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்தாண்டு செப்டம்பர் வரையிலான நடிகர் விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவும் நடிகர் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு இன்று நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், தற்பொழுது விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்களையும் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களை இன்று தாக்கல் செய்யததால், விஷால் 22ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென நடிகர் விஷாலுக்கு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது.