“வடிவேலு பற்றி அவதூறு தெரிவிக்க மாட்டேன்” – நடிகர் சிங்கமுத்து!
நடிகர் வடிவேலுவுக்கு எதிராக எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்கமாட்டேன் என, நடிகர் சிங்கமுத்து தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: யூடியூப் சேனல்களில் தன்னை குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகர் வடிவேலு, 5 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்த வழக்கானது கடந்த 6-தேதி விசாரணைக்கு வந்த நிலையில், வடிவேலு குறித்து எந்தவிதமான அவதூறு கருத்தும் தெரிவிக்கமாட்டேன் என உத்தரவாதம் அளிக்கும்படி சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக, பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கை இன்று (டிசம்பர் 11 ஆம் தேதி) ஒத்தி வைத்தார். அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, நடிகர் சிங்கமுத்து தரப்பில், உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், அப்போது, நடிகர் வடிவேலுக்கு எதிராக எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்கப் போவதில்லை. வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ தவறான எந்த தகவலையும் தெரிவிக்கப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்டஈடாக வழங்கக் கோரி நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு வரும் ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.