வேகமெடுக்கும் பாலியல் குற்றசாட்டு: கேரள அரசு குழுவில் இருந்து நடிகர் முகேஷ் அதிரடி நீக்கம்.!
திருவனந்தபுரம்: திரைப்படக் கொள்கையை வகுப்பதற்கான கேரள அரசின் குழுவில் இருந்து நடிகர் முகேஷ் நீக்கம் செய்யப்பட்டார்.
மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதிலிருந்து, கேரள சினிமா தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து உள்ளது. மலையாள பிரபலங்களின் சிலரது கேவலமான உண்மை முகம் வெளியே தெரிய தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில், இந்த விவாகரம் தொடர்பான கொல்லம் மாவட்ட ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ.வும், மலையாள நடிகருமான முகேஷ் மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், திரைப்படக் கொள்கையை உருவாக்கும் பொறுப்புக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அனைத்து உறுப்பினர்களையும் குழுவிலிருந்து நீக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) முடிவு செய்துள்ளது. தற்போது வரை அந்த குழுவில் நடிகர் முகேஷ் மட்டுமே அத்தகைய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில், கொள்கையை வகுப்பதற்கான கேரள அரசின் குழுவில் இருந்து நடிகர் முகேஷ் நீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, கொல்லத்தில் அமைந்துள்ள நடிகர் முகேஷின் இல்லம் நோக்கி காங்கிரஸ் கட்சி தொ ண்டா்கள் பேரணியாக சென்றனா். முகேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவா் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவா்கள் கோஷமிட்டனா். ஆனால், இது தொடா்பகாக முகேஷ் இதுவரை பதிலளிக்கவில்லை.
இதனிடையே, மலையாள சினிமாவின் நடிகர் சங்க அமைப்பான AMMA-வின் தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். மோகன்லால் உட்பட 16 நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளது மேலும் மலையாள திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படக் கொள்கை
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி கேரள சட்டசபையில் கலாசாரத் துறை அமைச்சர் சாஜி செரியன், அரசின் திரைப்படக் கொள்கையை வகுப்பதற்கான இரண்டு நாள் சினிமா மாநாடு நடத்தப்படும் என்றும், அந்தக் கொள்கையை மாநாட்டில் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
அதன்படி, KSFDC தலைவர் ஷாஜி என் கருண் தலைவராகவும், கலாச்சாரத் துறையின் செயலாளர் ஒருங்கிணைப்பாளராகவும் வரைவு திரைப்படக் கொள்கையை உருவாக்குவதற்கான திரைப்படக் கொள்கை குழு அமைக்கப்பட்டது.
10 பேர் கொண்ட அந்த குழுவில் எம்.முகேஷ், மஞ்சு வாரியர், பி.உன்னிகிருஷ்ணன், பத்மபிரியா, ராஜீவ் ரவி, நிகிலா விமல், சந்தோஷ் குருவிலா, சி.அஜோய் ஆகியோர் இடம்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.