பாய்ந்தது வன்கொடுமை வழக்கு.. முதல்வரிடம் நடிகர் முகேஷ் விளக்கம்.!
திருவனந்தபுரம் : நடிகை பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனிடம் நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் மீது, கொச்சியில் உள்ள மரடு காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில், நடிகரும், அரசியல்வாதியுமான முகேஷ், முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, தன் மீதான பாலியல் புகார்கள் குறித்து விளக்கம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொச்சியைச் சேர்ந்த நடிகை ஒருவரின் புகாரின் பேரில், நேற்றைய தினம் கொல்லம் எம்எல்ஏ மீது, எர்ணாகுளத்தில் உள்ள மரடு போலீஸார் பாலியல் உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வருக்கு முகேஷ் அளித்த விளக்கத்தில், “தன் மீது குற்றச்சாட்டு கூறிய நடிகை, ஏற்கனவே தன்னிடம் பணம் கேட்டு மிரட்டினார், அவரின் குற்றச்சாட்டுகள் பொய்யானது. தனக்கு எதிராக பெண் நடிகை செயல்பட்டதற்கு, அவர் அனுப்பிய வாட்ஸ்அப் செய்திகள் தன்னிடம் இருப்பதாகவும், அந்த வாட்ஸ்அப் ஷேட்கள் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்பிப்பதாக ” முதல்வரிடம் கூறியுள்ளார்.
மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்திய ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான சில நாட்களுக்குப் பிறகு, மூத்த நடிகர் முகேஷ் மீதான குற்றச்சாட்டுகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.