அதிர்ச்சி.! பிரபல கராத்தே மாஸ்டர் ஹுசைனி காலமானார்!
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ஹுசைனி இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை : கமல்ஹாசன் நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் (1986) படத்தில் அறிமுகமானவர் நடிகரும் கராத்தே மாஸ்டருமான ஷிகான் ஹுசைனி. விஜய் நடித்த பத்ரி படத்தில் விஜய்க்கு குத்துசண்டை சொல்லிக்கொடுக்கும் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற இவர் நடிப்பை தாண்டி வில்வித்தை கற்றுக்கொடுக்கும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார்.
இதுதொடர்பாக தமிழக விளையாட்டுத்துறை உதவ வேண்டும் என்றும் அண்மையில் வீடியோ வெளியிட்டு இருந்தார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹுசைனி, கடந்த மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். தனக்கு தினமும் 2 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது என அவர் வெளியிட்ட வீடியோ பலரையும் கலங்க வைத்தது. பல்வேறு திரைபிரபலங்கள் இவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
சில தினங்களுக்கு முன்னர் தான், இறந்த பிறகு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சி பணிக்காக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தனமாக அளிப்பதாக கூறியிருந்தார்.
இப்படியான சூழலில், இன்று அதிகாலை 1.40 மணியளவில் நடிகரும் கராத்தே மாஸ்டருமான ஹுசைனி (வயது 60) சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவரது உடல் தற்போது அஞ்சலி செலுத்துவதற்காக பெசன்ட் நகரில் உள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.