விமானப்படை மரியாதை… கண்ணீர் மல்க இறுதி பயணம்.. நடிகர் டெல்லி கணேஷின் உடல் தகனம்!
சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சென்னை : பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு காலமான அவரது உடல் ராமபுரத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நேற்றும் இன்றும், அவரது உடலுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், இந்திய விமானப் படை வீரர்கள் தேசியக் கொடி போர்த்தி மரியாதை செய்தனர்.
கடைசியாக ஒரு முறை நடிகர் டெல்லி கணேஷ் முகத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள். தந்தையை இழந்து கலங்கி நின்றார் மகன் மகாதேவன் கணேஷ். பின்னர், அவரது உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
விமானப் படை மரியாதை
அதற்கு முன், நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு இந்திய விமானப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக டெல்லி கணேஷ், இந்திய விமானப்படை அதிகாரியாக இருந்தார்.
மறைந்த டெல்லி கணேஷ் அவர்கள் 1964 முதல் 1974 வரை தனது 20 வயது முதல் 30 வயது வரை Indian Airforce இந்திய விமானப் படையில் இராணுவ வீரராக பணியாற்றியவர் என்பது குறிப்பிட தக்கது. இந்நிலையில், விமானப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
டெல்லி கணேஷின் இறுதி ஊர்வலத்தின்போது, தனது கணவரின் உடலுக்கு போர்த்தப்பட்ட தேசியக்கொடியை பெற்றுக்கொண்டதும் அதனை அணைத்துக்கொண்டு டெல்லி கணேஷ் மனைவி பிரிவை ஏற்க முடியாமல் கண்ணீருடன் அனுப்பி வைத்தார்.