Actor Babu: 30 வருடம் போராட்டம்! ‘என் உயிர் தோழன்’ நடிகர் பக்கவாத பாதிப்பால் காலமானார்!
பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘என் உயிர் தோழன்’ படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் பாபு, உடல்நலக்குறைவால் 30 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவிற்கு பாரதிராஜா உள்ளிட்ட திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனெவே, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் இருக்கும் தமிழ் திரையுலகதிற்கு, பழம்பெரும் நடிகர் பாபுவும் காலமான செய்தி மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த பாபு, இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘என்னுயிர் தோழன்’ என்ற அரசியல் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த படத்தில் அவர், குடிசை வாழ் கட்சி ஊழியரின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இவருக்குமிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.
1991 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, பாபு உயரமான பாறையில் இருந்து விழுந்ததில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார். சமீபத்தில் கூட இயக்குனர் பாரதிராஜா அவரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, பண உதவியும் செய்தார்.