“இறந்தவரின் குடும்பத்திற்கு துணையாக இருப்பேன்” ஜாமீனில் வந்த அல்லு அர்ஜுன் பேட்டி!
இறந்தவர் குடும்பத்தாருக்கு மீண்டும் ஒருமுறை இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன். - ஜாமீனில் வெளியே வந்த அல்லு அர்ஜுன் பேட்டி.
ஹைதிராபாத் : டிசம்பர் 5 புஷ்பா 2 ரிலீசின் போது ஹைதிராபாத் சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்போது ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, சிக்கட்பள்ளி போலீசார் திரையரங்கு உரிமையாளர், மேலாளர் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை அடுத்து, அவர் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு 14 நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கேட்டு ஹைதிராபாத் உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் தரப்பு தாக்கல் செய்து இருந்தது. வழக்கு விசாரணையில் ஹைதிராபாத் உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருந்தாலும், அதற்குள் சஞ்சல்குடா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டதால் இன்று காலையில் தான் அவர் விடுவிக்கப்பட்டார்.
இன்று காலையில் சஞ்சல்குடா மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜுன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” அனைவரது அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. நான் நலமாக இருக்கிறேன். நான் சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகன். அதற்கு நான் ஒத்துழைப்பேன். இறந்தவரின் குடும்பத்திற்கு மீண்டும் ஒருமுறை எனது இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவரின் குடும்பத்திற்கு எல்லா வகையிலும் துணையாக இருப்பேன்.
கடந்த 20 ஆண்டுகளாக எனது திரைப்படம் வெளியாகும்போது | திரையரங்கிற்கு செல்வது எனது வழக்கம். இம்முறை துரதிர்ஷ்டவசமாக அந்த விபத்து நடந்துவிட்டது.” என இடைக்கால ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த நடிகர் அல்லு அர்ஜுன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சஞ்சல்குடா மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த நடிகர் அல்லு அர்ஜுன், நேராகஹைதிராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் கீதா ஆர்ட்ஸ் அலுவலகத்திற்கு புறப்பட்டார்.