தலைமறைவான நடிகர் சித்திக்.. நாடு முழுக்க பறந்தது லுக் அவுட் நோட்டீஸ்.!
பாலியல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக நடிகர் சித்திக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியதும் தலைமறைவானார்.
கொச்சி: கடந்த 2016-ல் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்காட் ஹோட்டலில் ஒரு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிக்குப் பிறகு, மலையாள நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் நடிகை ஒருவர் போலீஸாரிடம் குற்றம் சாட்டினார்.
இதன் அடிப்படையில், திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகர் சித்திக் மீது, பாலியல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, ‘அம்மா’ அமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சித்திக் ராஜினாமா செய்தார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கேரள நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் சித்திக், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது கேரள உயர் நீதிமன்றம். இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக நடிகர் சித்திக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியதும் தலைமறைவானார்.
இந்நிலையில், தலைமறைவான மலையாள நடிகர் சித்திக் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தும் முயற்சியாக, நாடு முழுவதும் உள்ள செய்தித்தாள்களில் லுக்அவுட் சுற்றறிக்கையை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஒத்துழைக்குமாறு அனைத்து மாநில டிஜிபிகளுக்கும் மின்னஞ்சலும் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் சித்திக் வேறு எந்த மாநிலத்தில்அடையாளம் காணப்பட்டாலும் விசாரணைக் குழுவை தொடர்பு கொள்ளும் வகையில், நாளிதழ்களுக்கு தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
சித்திக்கின் புகைப்படம் மற்றும் விசாரணைக் குழுவின் தொடர்பு எண் அடங்கிய நோட்டீஸ் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா நாளிதழ்களில் ஏற்கனவே நேற்று வெளியிடப்பட்டது. மேலும், சித்திக்கை தேடி சென்னை மற்றும் பெங்களூருவில் சிறப்புக் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
அவர், தலைமறைவாகி இரண்டு நாள் ஆகியும் பிடிபடாமல் உள்ள நிலையில், கேரள போலீசார் இந்த தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். மேலும், இந்த தேடுதல் வேட்டையில், மொத்தம் 10 குழுக்களும், சைபர் பிரிவைச் சேர்ந்த மேலும் 10 குழுக்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்த பாலியல் வழக்கில் தனக்கு முன்ஜாமீன் தர மறுத்த கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, சித்திக் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை தனது மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து நடிகர் தனது வழக்கறிஞர் ரஞ்சீதா ரோஹத்கி மூலம் புதிய ஜாமின் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.