“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படமாக லப்பர் பந்தை எடுத்துள்ளேன் என இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கூறியுள்ளார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக ஹரீஷ் கல்யாணும், தினேஷும் மோதிக் கொள்கின்றனர். அவர்களின் ஈகோவால் காதல் உடைந்தநிலையில் என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை.
கிராமத்தில் நடக்கும் ஒரு நகைச்சுவையான, உணர்வுபூர்வமான கிரிக்கெட் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து விஜயகாந்தின் தீவிர ரசிகன் என்பதால், இந்த படத்தில் வீட்டின் சுவரில் கேப்டன் சித்திரம், பைக்கில் கேப்டன் ஸ்டிக்கர் என பல முறை கேப்டன் விஜயகாந்தை நினைவூட்டியுளார்.
இதை பற்றி பிரபல ஊடகம் ஒன்றில் பேசிய தமிழரசன் பச்சமுத்து, “தற்போது உள்ள சில இயக்குநர்கள் அவர்கள் மிகவும் விருப்பமான நடிகர்களுக்கு சிறப்பான ஒரு படத்தை இயக்குவது போல் நானும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அர்ப்பணிக்கும் விதமாக ஒரு படத்தை இயக்க நினைத்தேன்.
அதாவது, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்த்து பிரியப்படுகிற மாதிரி, லோகேஷ் கனகராஜ் கமல் சார்னு தனிப்பட்ட பிரியம் காட்டுகிற மாதிரி, நான் விஜயகாந்துக்கு ஒரு படத்தை சமர்ப்பணமாகப் பண்ணணும்னு நினைத்தேன்.
அந்த வகையில் தான், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படமாக ‘லப்பர் பந்து’ படத்தை எடுத்துள்ளேன்.இந்த லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷ் அவர்கள் தீவிர ரசிகர்.
தினேஷ் வீடு முழுக்க விஜயகாந்த் படங்கள், பைக் ஸ்டிக்கர்ஸ், விஜயகாந்தின் பாடல்கள் என ரொம்ப நிறைவாக அமைஞ்சுபோச்சு. நாம் பார்த்த விஜயகாந்தை நம்ம படத்தில் கொண்டாடணும்னு நினைச்சேன்.
அப்படி தான், படம் நெடுக கேப்டனோட ரெஃபரென்ஸ் இருந்துகிட்டே இருக்கும். இந்த படம் விஜய்காந்த் அவர்களின் நினைவுகளை நம்முள் உலாவ செய்யும் ” என ஒரு பிரபல பத்திரிக்கை பகிர்ந்துள்ளார்.