ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!
முன்னாள் ஊழியர் சுபாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை செய்து வந்த சுபாஷ் என்பவர், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப், 2 மொபைல் போன்களை திருடிச் சென்றதாகசென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின்பேரில் நுங்கம்பாக்கம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. பதிலுக்கு சுபாஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் பார்வதி நாயர் வீட்டில் வேலை செய்யும் பொழுது, தன்னை துன்புறுத்தியதாகவும், திருட்டுப்பட்டம் கட்டியது மட்டும் இல்லாமல், தான் தங்கியிருந்த அறைக்கு வந்து நடிகை பார்வதி நாயர், உள்ளிட்ட 7 பேர் தன்னை தாக்கியதாகவும் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தற்பொழுது, முன்னாள் ஊழியர் சுபாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த விவகாரம் தொடர்பாக, பார்வதி நாயர் உட்பட கொடப்பாடி ராஜேஷ், இளங்கோவன் செந்தில், அருண் முருகன், அஜித் பாஸ்கர் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.