ஆடு திருடியதாக 2 தலித் இளைஞர்களை தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை!
தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியால் மாவட்டத்தில் ஆடுகளை திருடியதாக சந்தேகத்தின் பேரில், 2 தலித் இளைஞர்களை ஆட்டு தொழுவத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடு பண்ணை உரிமையாளர் ஆடு திருடியதாகக் கூறி, அந்த இரண்டு தலித் இளைஞர்களை கொட்டகையில் தலைகீழாகத் தொங்கவிட்டு, தீ வைத்து அடித்து சித்திரவதை செய்திருக்கிறார். பலியானவர்கள் தேஜா மற்றும் கிரண் என்று அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில், துன்புறுத்தப்பட்ட கிரணின் மனைவி அளித்த புகாரின் பேரில், எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ராமுலு, ஸ்வரூபா மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளனர்.
கடந்த வாரம் மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு 4 தலித் இளைஞர்கள் புறாக்களையும், ஆட்டையும் திருடியதாகக் குற்றம் சாட்டி, மரத்தில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு ஆறு பேரால் தாக்கப்பட்டடனர்.