மீண்டும் போராட்ட களத்தில் நடிகை ஸ்ரீரெட்டி,அரசியலுக்கு வர திட்டம்!
பட வாய்ப்பு தர படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சொன்ன குற்றச்சாட்டினால் தெலுங்கு பட உலகம் கலவரத்தில் கிடக்கிறது. ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் செக்ஸ் தொல்லை கொடுத்தவர்கள் என்று டைரக்டர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நடிகர் நானி என்று தொடர்ந்து பெயர்களை வெளியிட்டார்.
தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டியை நீக்கி வைத்து அவருடன் யாரும் நடிக்க கூடாது என்று தடை போட்டது. இதை எதிர்த்து அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக மனித உரிமை ஆணையம், மகளிர் சங்கங்கள் இறங்கியதால் அவர் மீதான தடையை நடிகர் சங்கம் நீக்கியது.
இந்த நிலையில் சமூக சேவை பணிகளில் ஸ்ரீரெட்டி தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளார். பெண்கள் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து நடைபெறும் கருத்தரங்குகளிலும் பேசுகிறார். ஆந்திரா ஸ்ரீசைலம் பகுதியில் உள்ள கண்மாயில் மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கிராமப்புற பெண்கள் பலர் வேலை செய்து வந்தனர்.
அந்த வேலையை திடீரென்று நிறுத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இதை கண்டித்து அந்த பெண்களுடன் சேர்ந்து ஸ்ரீரெட்டி தலையில் முண்டாசு கட்டி போராட்டம் நடத்தினார். விரைவில் ஒரு கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட ஸ்ரீரெட்டி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.