மீண்டும் சின்னத்திரையில் இணையும் கணவன் மனைவி..!
‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் சேர்ந்து நடித்த தினேஷ்-ரச்சிதா ஜோடி, காதலித்து நிஜவாழ்விலும் இணைந்தார்கள். பிறகு ரச்சிதா, ‘சரவணன் மீனாட்சி’ சீசன் 2, 3 என பிசியாகிவிட்டார். தினேஷ் தற்போது, ‘பூவே பூச்சூடவா’ தொடரில் லீடு ரோலில் நடித்துவருகிறார். இந்நிலையில், பழைய ‘சரவணன் – மீனாட்சி’ ஜோடி, மிர்ச்சி செந்திலும் ஶ்ரீஜாவும் திருமணத்துக்குப் பிறகும் ஜோடியாக நடித்ததுபோல (மாப்பிள்ளை தொடரில்) ரச்சிதாவும் தினேஷும்கூட விரைவில் ஒரு சீரியலில் ஜோடியாக நடிக்கப்போகிறார்கள் எனத் தகவல்கள் கிளம்பின. அதை இப்போது உறுதிப்படுத்தியிருக்கிறார் ரச்சிதா. விஜய் டி.வி-யில் ‘சரவணன் மீனாட்சி’க்காக ஸ்பெஷல் அவார்டு வாங்கிய கையோடு, ரஷ்ய தமிழ்ச்சங்கம் அளிக்கும் விருதைப் பெற அங்கு கிளம்பியவர், ஏர்போர்ட் செல்லும்முன் பேசியதாவது…
”ஆமாங்க, நானும் என் புருஷனும் சேர்ந்து நடிக்கப்போறது நிஜம்தான். ஷூட்டிங்லாம் தொடங்கியாச்சு. வழக்கமா, முக்கால்வாசி சீரியல்கள் மாமியார் வீடுகள்ல நடக்கற சண்டைகளைத்தானே பேசும்? எங்களோட சீரியல், மாமியாரின் ஊர்க் கதையைப் பேசப்போகுது. குழப்பமா இருக்கா? இந்த சீரியலோட கதை, என்னோட புகுந்த வீடான ஶ்ரீவில்லிப்புத்தூரைச் சுத்தி நடக்குது. இந்த ஒரு விஷயத்தை மட்டுமே என்னால இப்ப சொல்ல முடியும். மத்தபடி, எங்க ரெண்டு பேரைத் தாண்டி வேற யார் நடிக்கறாங்க, சீரியலுக்கு என்ன பேர்? எந்த டி.வி-யில வரப்போகுதுங்கிறதையெல்லாம்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, அவர் (தினேஷ்) சொல்வார்” என்கிறார்.