மாரி 2 – சினிமா விமர்சனம்
ஒவ்வொரு நடிகருக்கும் வணிகரீதியான வெற்றி என்பது அவசியமான ஒன்று. அப்படி தனுஷின் திரைவாழ்வில் வெற்றியை குவித்த படம் மாரி. தற்போது ஒரு வெற்றியை கொடுத்தாக வேண்டிய காலகட்டத்தில் வெளிவந்துள்ளது தனுஷின் மாரி-2. முதல் பாகத்தின் வெற்றியை குவிக்குமா இரண்டாம் பாகம். அலசுவோம் வாங்க..
மாரி என்றதுமே நினைவுக்கு வருவது நீண்ட கிருதாவும், முறுக்கு மீசையும், கருப்பு கண்ணாடியும் தான்.. இதிலும் அதே கெட்டப்பை பயன்படுத்தியுள்ளார் தனுஷ். வழக்கமான கிண்டல், கலாட்டா போன்றவற்றோடு சாய் பல்லவி உடனான காட்சிகளில் பொறுப்புள்ள குடும்ப தலைவனாகவும் காட்சி தருகிறார். க்ளைமேக்ஸ் சண்டையில் பொல்லாதவன் படத்தை நினைவூட்டும் வகையில் சிக்ஸ் பேக்ஸ் உடலுடன் மிரட்டுகிறார். நடிப்பு அவருக்கு இயல்பாக வருகிறது, ஆனால் தனது ரசிகர்களை மட்டுமே குறிவைத்து நடித்துள்ளதால் பொது பார்வையாளர்களுக்கு சற்று அலுப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
சாய் பல்லவி. அராத்து ஆனந்தியாக மிரட்டுவார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. அதுவும் அவர் பேசும் சென்னை பாஷை சாய் பல்லவிக்கு ஒட்டவேயில்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்று தான் சாய் பல்லவிக்கு சொல்லத் தோன்றுகிறது. அதேபோன்று சின்னத்திரையில் கலக்கும் அறந்தாங்கி நிஷா, சாய் பல்லவியோடு சேர்ந்து காமெடி செய்ய முயன்று இருக்கிறார். ஆனால் அது முழுமையாக கைகூடவில்லை.
முதல் பாகத்தை தாங்கிப் பிடித்த இரட்டைத் தூண்களான ரோபோ சங்கரும், வினோத்தும் தான் மாரி 2-யும் சுமக்கிறார்கள். அவர்கள் வரும் காட்சியில் திரையரங்கு கைத்தட்டல்களால் அதிர்கிறது.
அடித்தொண்டை குரலுடன் ஐஏஎஸ் அதிகாரியாக வந்து போகிறார் வரலட்சுமி. அதேபோன்று தனுஷின் நண்பன் கதாபாத்திரத்தில் கிருஷ்ணா. தனக்கான பங்களிப்பை இருவருமே தந்துள்ளார்கள்.
கதாநாயகனை பெரிய பிம்பமாக காட்ட வேண்டுமென்றால் சமபலமுள்ள வில்லன் கதாபாத்திரம் அவசியம். எம்ஜிஆர் படங்களின் வெற்றியில் இந்த அம்சத்தை காணலாம். மாரி 2 படத்தில் தனுசுக்கு இணையான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மலையாளத்தில் கலக்கி வரும் டோவினோ தாமஸ். ஆனால் அவரது பாத்திர சித்தரிப்பு சற்று முன்னுக்குப் பின் முரணாக அமைந்து விட்டதால் எதிர்பார்த்த அழுத்தம் கிடைக்கவில்லை.
படம் வெளியாவதற்கு முன்பு இணையதளங்களை ஆட்டிப்படைத்தது யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், பாடல்களும். படத்திற்கு வலுசேர்க்கும் காரணிகளில் ஒன்றாக அமைகிறார் யுவன். பாடல் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் ஒளிப்பதிவு அபாரம். அதற்கே ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாசுக்கு ஒரு பூங்கொத்தை பரிசளிக்கலாம். பிரசன்னாவின் எடிட்டிங்கும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. தனிப்பட்ட பாராட்டுக்களை அள்ளிச் செல்கிறார் சண்டை இயக்குனர் ஸ்டண்ட் சில்வா.
எதைச் சொன்னால், எப்படிச் சொன்னால் இளைஞர்களை கவரலாம் என தெளிவாக தெரிந்து வைத்து இருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன். ஆனால் சற்று கூடுதலாக தந்துவிட்டதால் திகட்டுவதையும் தவிர்க்க முடியவில்லை.
மொத்தத்தில் மாரி-2 பழைய கஞ்சியை பழைய பாத்திரத்திலேயே தந்துள்ளார், தொட்டுக் கொள்ள மட்டும் புதிய பதார்த்தங்கள்.