பொங்கலுக்கு யாரு கிங்….ரஜினி, அஜித், சிம்பு படங்களுக்கு கடும் போட்டி…!!
பண்டிகையின்போது பெரிய பட்ஜெட் படங்களையும், மற்ற நாட்களில் சிறிய பட்ஜெட் படங்களையும் வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.
சிறிய படங்கள் பண்டிகை இல்லாத நாட்களில் வருகின்றன. அப்போதும் சில பெரிய படங்கள் போட்டிக்கு நிற்பதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.
இந்த நிலையில் வருகிற பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம், சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ ஆகிய 3 படங்கள் வெளியாகும் என்று அறிவித்து இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மூன்றுமே பெரிய படங்கள் என்பதால் அதிக தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 1,140 திரையரங்குகள் உள்ளன. ரஜினி படங்கள் வெளியாகும்போது 600–ல் இருந்து 650 திரையரங்குகளையும், அஜித் படங்களுக்கு 550–க்கும் மேற்பட்ட திரையரங்குகளையும், சிம்பு படத்துக்கு 250 முதல் 300 தியேட்டர்களும் ஒதுக்குவது உண்டு என்று தியேட்டர் அதிபர்கள் தரப்பில் கூறுகிறார்கள். பொங்கலுக்கு ரஜினிகாந்தின் பேட்ட படம் அதிகமான தியேட்டர்களை ஆக்கிரமிக்கும் என்கின்றனர்.
அஜித் படத்தையும் அதிக தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பில் தீவிரமாக உள்ளனர். 3 படங்களின் போட்டி வசூலை பாதிக்கும் என்கின்றனர். ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் இதனை வரவேற்கிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, ‘‘பொங்கலுக்கு ரஜினிகாந்த், அஜித்குமார், சிம்பு படங்கள் ஒன்றாக வருவதால் எல்லா தியேட்டர்களுக்கும் புதிய படங்கள் கிடைக்கும். தியேட்டர் அதிபர்கள் டெபாசிட் தொகை மற்றும் ‘மினிமம் கியாரண்டி’யை குறைக்க முடியும். அதிக லாபமும் கிடைக்கும்’’ என்றார்.
தெலுங்கில் ரஜினி படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. பொங்கலுக்கு ஆந்திராவில் மகேஷ்பாபு, பாலகிருஷ்ணா படங்கள் வெளியாவதால் அங்கு பேட்ட படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம் என்கின்றனர்.
dinasuvadu