பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட கதையில் அஜித் 2020 ரிலீஸ் உறுதி ..!
அஜித் நடிக்க, விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ராஜராஜ சோழன் எனும் சரித்திரக் கதையை உருவாக்குவது உறுதி என்று தெரிகிறது. எழுத்துச்சித்தர் பாலகுமாரன், சோழர்களின் காலத்துக்கு இந்தக் கதைக்கான ஒன்லைன் ரெடிசெய்து கொடுத்திருக்கிறார்.
வாசகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவையாகவும் மனதையே புடம்போட்டதாகவும் வாழ்க்கையையே திசை திருப்பியதாகவுமான பல நாவல்களைப் படைத்திருக்கிறார் எழுத்தாளர் பாலகுமாரன். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக, தஞ்சைப் பெரிய கோயில், தஞ்சாவூர், கும்பகோணம் முதலான சோழ தேசத்தின் பல பகுதிகள் எனச் சென்று வந்தார். கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வுகள் மேற்கொண்டார். கல்வெட்டு ஆய்வாளர்கள், குடவாயில் பாலசுப்ரமணியம், டாக்டர் கலைக்கோவன் முதலான சரித்திர ஆய்வாளர்களுடன் சோழ தேசம் குறித்தும் ராஜராஜ சோழன் குறித்தும் கேட்டறிந்தார்.
கிட்டத்தட்ட தன் கனவுப் படைப்பாக, ராஜராஜ சோழனின் சரிதத்தையும் சோழர்களின் கலாச்சாரத்தையும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரத்துடன் நிற்கும் பெரியகோயில் எழுப்பப்பட்ட விதத்தையும் பிரமிக்கும் வகையில், உடையார் எனும் ஆறு பாகங்கள் கொண்ட நாவலைப் படைத்தார். சுமார் 1,500 பக்கங்கள் கொண்டது உடையார்.
கடைக்கு வந்ததுமே விற்றுத்தீர்ந்தன உடையார் புத்தகங்கள். நண்பர்களுக்கு பிறந்தநாள், திருமண நாள் பரிசாக உடையார் புத்தகங்களை வாங்கி அன்பளிக்காக வழங்கி மகிழ்ந்தார்கள் வாசகர்கள்.
வாசகர்களை மட்டுமின்றி, திரையுலகில் பலரையும் பாலகுமாரனின் உடையார் நூல், ஈர்த்தது. படித்துப் பார்க்க என்னவோ செய்தது. மொத்தக் கதைகளையும் எப்போதும் நம் கண்ணுக்கு எதிரே காட்சிப்படுத்திக் கொடுக்கிற எழுத்து பாலகுமாரனுடையது. அந்த விஷூவல், திரையுலகில் பலராலும் ரசிக்கப்பட்டது. இதில் மிக மிக ரசித்து லயித்தவர் இயக்குநர் விஷ்ணுவர்த்தன்.
அறிந்தும் அறியாமலும் மூலம் அறிமுகமாகி பட்டியல், பில்லா, ஆரம்பம் என அஜித்தின் மனதுக்கு நெருக்கமாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். உடையார் படித்துவிட்டு, எழுத்தாளர் பாலகுமாரனைச் சந்தித்தார். தன் ஆசையைச் சொன்னார்.
மேலும் பல விஷயங்களையும் விவாதிக்கத் தொடங்கினார் விஷ்ணுவர்த்தன். கிட்டத்தட்ட, ஸ்டோரி டிஸ்கஷன் என்பது அங்கே மெல்ல மெல்ல நடந்தேறியது.
தினமும் பாலகுமாரனின் வீட்டுக்கு விஷ்ணுவர்த்தன் வந்து, அவருடன் கதை குறித்த விவாதங்களில், திரைக்கதையாக்கும் வடிவத்திலும் முழுவதுமாக ஈடுபட்டார். பிறகு ஒருநாள், விஷ்ணுவர்த்தனை அழைத்துக்கொண்டு, தஞ்சாவூர்ப் பெரியகோயிலைச் சுற்றிக் காட்டினார். அங்கே உள்ள கல்வெட்டுகள் மொத்தமும் பாலகுமாரனுக்கு அத்துப்படி. அப்படியே அந்தக் கல்வெட்டு வார்த்தைகளை வாசித்துக் காட்டினார்.
தஞ்சை பெரியகோயிலுக்குச் சென்று நின்றாலே, முப்பது நாற்பது வயது குறைந்துவிடும் அவருக்கு. வழக்கமாகவே உற்சாகமாக வலம் வருபவர், இன்னும் உற்சாகமானார்.
பெரியகோயிலின் கோபுரத்துக்குள் ஏறிச்செல்ல படிகள் உண்டு. கோபுரத்தின் உட்பகுதிகளில், ராஜராஜ சோழன் காலத்து ஓவியங்கள் பலவும் இருக்கின்றன. இதை பாலகுமாரனே பலமுறைக் குறிப்பிட்டு, தான் வியந்ததை எழுதியிருக்கிறார். இயக்குநர் விஷ்ணுவர்த்தனை அழைத்துக்கொண்டு, கோபுரத்தின் உள்பகுதிக்குள் படியேறிச் சென்று, அங்கே உள்ள ஓவியங்கள், ஓவியங்களில் இருப்பவர்கள் என அவரிடம் விவரித்தார் பாலகுமாரன்.
கோபுரப்பகுதிக்குள் இருந்தபடி பெரியகோயிலின் 216 அடி விமானம், அதன் பிரமாண்டம், தொழில்நுட்பம், தஞ்சைப் பகுதி என்றெல்லாம் விளக்கிய பாலகுமாரன், அங்கிருந்தபடியே, கதையை எங்கிருந்து துவக்கினால் சரியாக இருக்கும், கதையின் போக்கு எங்கெல்லாம் போய்வரவேண்டும், கதையில் பெரியகோயில் களமாக அமைந்து எதுமாதிரியான தாக்கங்களையெல்லாம் ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் என்றெல்லாம் முழுமையாகச் சொன்னார் பாலகுமாரன்.
தமிழில் சரித்திரப்படங்களின் காலம் முடிந்துவிட்டது என்பார்கள். எண்பதுகளுக்குப் பிறகு சரித்திரப் படங்களை ஆர்வமாக எடுப்பவர்களும் இல்லை; ஆர்வத்துடன் பார்ப்பவர்களும் இல்லை எனும் நிலையே இருந்தது. கமல்ஹாசன் கூட, மருதநாயகம் எனும் சரித்திரக் கதையை எடுக்க பூஜை போட்டு, சில காட்சிகளை எடுத்தார். ஆனால், எகிறியடிக்கும் பட்ஜெட் முதலான காரணங்களால் அப்படியே நிறுத்திவைத்தார்.
மீண்டும் சரித்திரப் படங்கள் எடுக்கலாம். லாபமும் பேரும் நிச்சயம் என்பதை உறுதிப்படுத்தி, எல்லோருக்கும் நம்பிக்கையை விதைத்தது பாகுபலி. சரித்திரக் கதைக்கான அத்தனை ஜிம்மிக்ஸ் வேலையும் செய்து மிரட்டியெடுத்த பாகுபலி, சினிமாக்காரர்களுக்கு ஒரு உத்வேக வெளிச்சத்தைப் படரவிட்டது. முக்கியமாக, விஷ்ணுவர்த்தனுக்கு!
தனக்குப் பிடித்த, மனதுக்கு நெருக்கமான அஜித்தை ராஜராஜ சோழனாக உருவகப்படுத்திப் பார்த்தார். இதுகுறித்து அஜித்திடமும் விஷ்ணுவர்த்தன் பேசிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
இதையடுத்து, மீண்டும் பாலகுமாரனை சந்தித்துப் பேசிய பிறகு, அடுத்த சில நாட்களிலேயே அஜித் நடிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ராஜராஜ சோழன் கதைக்கான ஒன்லைன் ஆர்டரும் முழுவதும் எழுதிக் கொடுத்துவிட்டார் எழுத்துச்சித்தர் பாலகுமாரன்.
ஒரு படத்துக்கு முதல் விஷயமும் முக்கியமான விஷயமும்… ஒன்லைன் தான்! அதாவது, கதையின் ஆரம்பம் தொடங்கி அடுத்தடுத்து கதை நகரும் போக்கு முதலான விஷயங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கும். அந்தக் கட்டமைப்பு… ஒன்லைன்… அஜித், விஷ்ணுவர்த்தன், பாலகுமாரன் கூட்டணியிலான ராஜராஜசோழன் படத்துக்கு ரெடி.
பாகுபலி அளவுக்கு மிக பிரமாண்டமாய் மிரட்டியெடுக்கும் வகையில் ராஜராஜ சோழனின் கதையைப் பண்ணுவது என்பதெல்லாம் உறுதிசெய்யப்பட்டது. படத்துக்கு ராஜராஜசோழன், ராஜராஜன், உடையார் என்று டைட்டில் வைக்கலாம் என்றும் யோசித்து வருகிறார்கள்.
எழுத்தாளர் பாலகுமாரன் சமீபத்தில் (மே 15ம் தேதி) மறைந்தார். மும்பையில் ஹிந்திப் படஷூட்டிங்கில் இருந்த விஷ்ணுவர்த்தன், உடனே புறப்பட்டு சென்னைக்கு வந்து, பாலகுமாரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மிகப்பிரமாண்டமான முறையில் ஹிந்திப்படம் இயக்கி வரும் விஷ்ணுவர்த்தன், அடுத்த வருடம் 2019ல் படம் ரிலீசாகிவிடும் என்று தெரிவித்தார்.
அநேகமாக, 2019ல் அஜித், விஷ்ணுவர்த்தன், பாலகுமாரன் கூட்டணியில் உடையார் திரைப்பட அறிவிப்பு வரும். அதையடுத்து படப்பிடிப்பைத் தொடங்கி, 2020ல் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது விஷ்ணுவர்த்தனின் திட்டம்