பள்ளிபருவத்திலே அழகிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்ற பிரபல நடிகை !
பிரபலமான நடிகைகளின் வளர்ச்சியை ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் பள்ளிப் பருவத்தில் இருந்தே அதற்கான அடிப்படை தகுதிகளை வளர்த்து வந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. இந்தி திரை உலக பிரபலம் பிபாஷா பாசுவுக்கு அழகிப் போட்டிக்கான வாய்ப்பு 16 வயதிலே கிடைத்திருக்கிறது. பள்ளிப்பருவத்திலே அதை பயன் படுத்திக்கொண்டு அவர் எப்படி எல்லாம் வளர்ந்து, திரை உலகில் நிலையான இடத்தை பிடித்தார் என்பதை மனந்திறந்து சொல்கிறார்:
‘‘நான் 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றிருந்தேன். அப்போது அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. ஒருவர் என்னை அணுகி, சூப்பர் மாடல் போட்டிக்கான ஆரம்பசுற்றுப் போட்டிகள் நடக்க இருக்கின்றன. அதில் நீங்கள் கலந்து கொள்ள விரும்புகிறீர்களா? என்று கேட்டார். நான் ஒரு சயின்ஸ் குரூப் மாணவி, மாடலிங் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. ஆனால் அவர்கள், கொல்கத்தாவில் இருந்து 100 பெண்களை தேர்வு செய்யப்போவதாகவும், நான் ஒரு படிவத்தை நிரப்பிக்கொடுத்தால் போதும் என்றும் வற்புறுத்தினார்கள். நானும் கலந்துகொள்ள சம்மதித்து இடம்பெற்றேன்.
சில நாட்களிலேயே அந்த 100 பேர் பட்டியல், 17 பேராகக் குறைக்கப்பட்டது. நான் ஆச்சரியப்படும்விதமாக, அந்தப் பட்டியலில் என் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஒரு விருந்தும், அதைத் தொடர்ந்து இறுதிச்சுற்றுப் போட்டியும் நடக்கும் என்று அறிவித்தார்கள். நான் ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொள்ளப் போவதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு போட்டியில் கலந்துகொண்டேன். இறுதிச்சுற்றில் என்னிடம் ஏதோ சில கேள்விகள் கேட்டார்கள், நானும் வாய்க்கு வந்ததைச் சொன்னேன். வீடு திரும்பிய நான், அப்படியே அந்தச் சம்பவத்தை மறந்துவிட்டேன்.
ஆனால் மறு வாரம் எங்கள் வீட்டுக்கு போன் செய்த சூப்பர் மாடல் மெகர் ஜெசியா, சூப்பர் மாடல் போட்டிக்கு கொல்கத்தாவில் இருந்து 3 பெண்களில் ஒருவராக நானும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அத்துடன் அவர் என்னிடம் செல்லக் கோபமாக, ‘ஏம்மா… எங்களிடம்கூடச் சொல்லாமல் போட்டியில் கலந்துக்கிட்டிருக்கியே?’ என்றார். அதற்கு நான், விடுமுறை நாளாக இருந்ததால் சும்மா ஒரு ஜாலிக்காக அதில் கலந்துகொண்டதாகக் கூறினேன்.