நடிகர் விஜயை பலபேர் முன்னிலையில் கலாய்த்த அபர்ணதி..!
‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ எனும் டிவி நிகழ்ச்சியில் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளும் ஆசையோடு கலந்து கொண்டு, இறுதி கட்டம் வரை சென்றிருந்தவர் அபர்ணதி. அவரது திருமண ஆசை அந்த நிகழ்ச்சியில் நிறைவேறவில்லை என்றாலும், அதில் கிடைத்த பிரபலத்தால் தற்பொழுது சினிமா துறையில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார்.
தற்பொழுது வசந்தபாலன் என்பவர் இயக்கும் திரைப்படத்தில், நடிகர் G.V. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர், விஜயின் தந்தை S.A சந்திர சேகர் அவர்கள் நடிக்கும் டிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில், நடிகர் விஜயை பற்றி அவர் தெரிவித்த கருத்து ஒன்று ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் இயல்புடைய அபர்ணதி, டிராஃபிக் ராமசாமி படத்தை பற்றி பேசும் போது, S.A சந்திர சேகர் அவர்கள் இந்த திரைப்படத்தில் அருமையாக நடித்திருப்பதாகவும், இந்த படத்தை பார்த்துவிட்டு வெளிவரும் மக்கள் கூட்டத்தினால் தமிழகத்தில் கண்டிப்பாக டிராஃபிக் ஏற்படும் என்றும் புகழ்ந்து பேசி இருந்தார்.
மேலும் S.A சந்திர சேகர் நடிக்க வந்துவிட்டதால், நடிகர் விஜய்க்கு இனி வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான் என விளையாட்டாகவும் ஒரு வார்த்தையை விட்டிருந்தார். என்றாலும் அதனை விஜயின் ரசிகர்கள் விளையாட்டாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. அபர்ணதியின் இந்த கருத்து குறித்து அவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.