நடிகர் கார்த்தியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியானது..!!
கார்த்தி நடிப்பில், ரஜத் இயக்கும் படத்துக்கு ‘தேவ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘வனமகன்’ சயிஷா கார்த்தி ஜோடியாக நடிக்க, மாமா பெண்ணாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார். அர்த்தனா பினு, சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், சவுந்தரராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் கார்த்தி. அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.
கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ரேணுகா, அம்ருதா, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மண் குமார் மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. மார்ச் மாதமே தொடங்கியிருக்க வேண்டிய ஷூட்டிங், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தத்தால் காலதாமதமாகத் தொடங்கியுள்ளது. சென்னையைத் தொடர்ந்து மும்பை, ஹைதராபாத், இமயமலை மற்றும் ஐரோப்பாவில் இதன் ஷூட்டிங் நடைபெறுகிறது.
இந்தப் படத்துக்கு ‘தேவ்’ எனத் தலைப்பு வைக்கப்படுள்ளதாகத் தெரிகிறது. கார்த்தி படங்கள் தெலுங்கிலும் வெளியாகும் என்பதால், அங்கும் இதே பெயரை வைக்கத் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
அமிதாப் பச்சன், ஃபர்தீன் கான், கரீனா கபூர் நடிப்பில் 2004-ம் ஆண்டு இதே பெயரில் ஒரு இந்திப் படம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்