தத்தெடுத்த கிராமத்திற்கு உரிய நிவாரண நிதியை வழங்கவில்லை…நடிகர் விஷால் மீது குற்றச்சாட்டு…!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கார்கா வயல் கிராமத்தை தத்தெடுத்த நடிகர் விஷால், மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், தமிழக அரசு சிறப்பு முகாம் அமைத்து அங்குள்ள மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றன. இதேபோல், சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வந்தனர். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் கார்கா வயல் கிராமத்தை, நடிகர் விஷால் தத்தெடுத்திருப்பதாக அறிவித்தார்.
தத்தெடுத்த கிராமத்திற்கு ஒரு போர்வை, ஒரு பிஸ்கட் பாக்கெட், ஒரு டார்ச் லைட் மட்டும்தான் கொடுத்திருப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். போர்வையும் பிஸ்கட் பாக்கெட்டும் தங்களது வாழ்வாதாரத்தை மாற்றிவிடாது என கூறியுள்ள கார்காவயல் கிராம மக்கள், பெயருக்காக மட்டுமல்லாமல் உணர்வுப்பூர்வமாக கிராமத்திற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். புயலால் இழந்துள்ள தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நடிகர் விஷாலால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
dinasuvadu.com