டைரக்டராக மாறும் நடிகர் விஷால் ..!!
விஷால் 2004–ல் செல்லமே படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இப்போது முன்னணி நடிகராக இருக்கிறார். அவர் நடிப்பில் வந்த சண்டகோழி, திமிரு, தாமிரபரணி, அவன் இவன், பாண்டிய நாடு, பூஜை உள்ளிட்ட பல படங்கள் வசூல் பார்த்தன. இந்த வருடம் வெளியான இரும்புத்திரை, சண்ட கோழி–2 படங்களுக்கும் வரவேற்பு இருந்தது.
நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிகளிலும் இருக்கிறார். அடுத்து டைரக்டர் அவதாரம் எடுக்கிறார். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. அவர் இயக்க உள்ள முதல் படம் விலங்குகளை பற்றியது. மொழிகளை கடந்து பல நாடுகளில் வெற்றி பெற்ற ஹாலிவுட் படங்களுக்கு இணையான கதையம்சத்தில் இந்த படம் இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.
தெருநாய்களும் முக்கிய கதாபாத்திரங்களாக இருக்கும். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். விஷால் ஏற்கனவே விலங்குகளுக்கு ஆதரவாக பேசி வருகிறார். விலங்குகளை சுட்டுகொல்வதற்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார். நீண்டகாலமாக யோசித்து வைத்திருந்த விலங்குகள் சம்பந்தமான கதை இப்போது இறுதி வடிவத்துக்கு வந்துள்ளது என்றும் இன்னும் சில மாதங்களில் படத்தின் தலைப்பு நடிகர்கள் விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.ஏற்கனவே நடிகர் அர்ஜூன் இயக்கிய படங்களில் விஷால் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இப்போது, அயோக்கியா படத்தில் நடித்து வருகிறார்.
dinasuvadu.com