சூப்பர்ஸ்டாருடன் மோதும் பிரபல பாலிவுட் வில்லன் …!
பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் கார்த்திக் சுப்பாராஜ் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார்.
பிரபுதேவா நடிப்பில் தற்போது ‘மெர்க்குரி’ படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பாராஜ். சைலண்ட் த்ரில்லர் படமான இது, ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்த பிறகு தொடங்க இருக்கிறது. அனிருத் ரவிச்சந்தர் முதன்முறையாக ரஜினிகாந்த் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில், ரஜினிக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் நடிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு மும்பை சென்ற கார்த்திக் சுப்பாராஜ், நவாஸுதீனிடம் கதை சொல்லியிருக்கிறார். அது அவருக்கு மிகவும் பிடித்துவிட நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நவாஸுதீன் சித்திக், 50க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்து பரவலான கவனத்தைப் பெற்றவர். இவர் ‘தலாஷ்’ படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.